search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கஷ்டங்கள், சோதனைகளை நீக்கும் ஆடிச்சுற்று வழிபாடு
    X

    கஷ்டங்கள், சோதனைகளை நீக்கும் ஆடிச்சுற்று வழிபாடு

    • ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.

    ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.

    சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயண சுவாமி, கோமதி அம்மன் முதலிய சன்னதிகளை உள்ளடக்கிய கோவில் வெளிப்பிரகாரத்தை 108 முறை சுற்றுவதே ஆடிச்சுற்று ஆகும்.

    சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு கொடி ஏறிய பின் ஆடிச்சுற்று எனும் பெயரில் பக்தர்கள் கோவிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையுடன் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள்.

    ஆடிச்சுற்று சுற்றுவதால் ஒரு காலில் நின்று தபசு காட்சியருளும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அம்பாளும் இப்படி தனது கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் அகற்றுகிறாள்.

    பக்தர்கள் தங்களின் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து, கோமதி அம்மனை வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள். மாணவ-மாணவிகள், வாலிபர்கள், கன்னிப்பெண்கள், வயதான ஆண்-பெண் என அனைத்து வயதினரும் ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள்.

    மாணவ-மாணவிகள் நன்கு படிக்க வேண்டும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும், எதிர்காலத்தில் மருத்துவர், என்ஜினீயர், கலெக்டர், போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள்.

    கன்னிப்பெண்கள் தனக்கு நல்ல கணவர் அமைய வேண்டும், நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், குழந்தை பேறு வேண்டும் என பல வேண்டுதல்களை மனதில் வைத்து ஆடிச்சுற்று செல்கின்றனர். இதேபோல் வாலிபர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வேண்டி ஆடிச்சுற்று செல்கின்றனர்.

    நடுத்தர வயது ஆண் மற்றும் பெண்கள் தங்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தங்களது குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். வயதானவர்கள் நோய்நொடியால் அவதிப்படாமல் வாழ வேண்டும் என வேண்டி செல்கிறார்கள்.

    இப்படியாக அனைத்து வயதினருமே தங்களுக்கு தகுந்தா ற்போல் கோமதி அம்மனை மனதில் நினைத்தப்படி ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதன் மூலம் கோமதி அம்மன் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டமே சாட்சி.

    தொடக்க காலத்தில் ஆடிச்சுற்று செல்பவர்களின் எண்ணிக்கை 100 முதல் 200 வரையே இருக்கும். ஆனால் இன்றோ பல்லாயிரக் கணக்கானோர் ஆடிச்சுற்று செல்கிறார்கள்.

    ஆடிச்சுற்று ஒரே நாளில் முடித்து விட முடியாது என்பதால் பல பக்தர்கள் சங்கரன் கோவிலில் பல நாட்கள் தங்கி ஆடிச்சுற்று செல்கிறார்கள். ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடந்த பிறகே பக்தர்கள் ஆடிச்சுற்று செல்ல தொடங்குவார்கள்.

    ஆடித்தபசு திருவிழாவிற்குள் ஆடிச்சுற்று முடித்துவிட வேண்டும். இதனால் கொடியேற்றப்பட்ட நாளில் இருந்தே பக்தர்கள் ஆடிச்சுற்று நடக்க தொடங்குவர். இதனால் கொடியேற்றபட்டதில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    வெளி பிரகாரத்தில் பக்தர்கள் ஆடிச்சுற்று சென்றபடியே இருப்பார்கள். விடுமுறை நாட்களில் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்படுவர். ஆடிச்சுற்று செல்லும் பக்தர்களின் நியாயமான அனைத்து வேண்டுதல்களையும் கோமதி அம்மன் நிறைவேற்றுவதாக ஐதீகம்.

    Next Story
    ×