என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
தேடி வரும் பக்தர்களுக்கு அருள் மாரி பொழியும் `அம்பிகை'
- அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன.
- அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார்.
நினைப்பவர்களுக்கும், தன்னைத் தேடி வருபவர்களுக்கும் அருள் மாரி பொழியும் அம்பிகை, 'கோமதி அம்மன்' என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள சங்கரன்கோவில் திருத்தலத்தில் 1944-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது.
ஆடி மாதம், ஆடித் தபசு திருவிழாவுக்கு உலகில் உள்ள மொத்த பேரும் திரண்டு வந்தது போல, சங்கரன்கோவில் முழுக்க மக்கள் வெள்ளம். இரவு நேரம். தெற்கு ரத வீதியில் இருக்கும் தபசு மண்டபத்தில், பல்லக்கில் எழுந்தருளியிருந்தாள் உற்சவ மூர்த்தியான அம்பிகை. திருக்கல்யாண அலங்காரத்தில் இருந்ததால், அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன.
அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார். சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள அரியூரை சேர்ந்த கணக்குப் பிள்ளை ஒருவர், பட்டரைப் போல வேடம் அணிந்து பல்லக்கை நெருங்கினார். அவர் அந்த கிராமத்து முக்கியஸ்தர். கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். மனோவசியம் உள்பட பல வித்தைகள் கற்றவர். அவரைப் பார்த்த எவருக்குமே சந்தேகம் ஏற்படவில்லை. 'யாரோ, பூஜை செய்யும் பட்டர்' என்று நினைத்தனர்.
பல்லக்கை நெருங்கிய அவர், அதில் ஏறி அம்மனின் காதுகளை அலங்கரிக்கும் வைரத் தோடுகளை கழற்றிக் கொண்டு, கும்பலோடு கும்பலாக கலந்து மறைந்தார். (அந்த தோடுகளின் அன்றைய மதிப்பு பதினாறாயிரம் ரூபாய்.) அப்போது அசதியுடன் பல்லக்கில் சாய்ந்திருந்த குப்புசாமி பட்டரை, சுமார் எட்டு வயது சிறுமி ஒருத்தியின் மென்மையான கரங்கள் உலுக்கி எழுப்பின. அரக்கப் பரக்க கண் விழித்து எழுந்த குப்புசாமி பட்டரின் எதிரில் ஒளி மயமாக அந்த குழந்தை நின்று கொண்டிருந்தாள்.
'என்ன? ஏது?' என்று கேட்பதற்கு முன், அவளாகவே பரபரப்புடன், 'மாமா... மாமா... எனது தோடுகளை ஒருவன் திருடிக் கொண்டு போகிறான். வா, வந்து அவனைப் பிடி' என்று அவரின் கைகளைப் பிடித்து இழுத்தாள். 'ஏதோ நடந்திருக்கிறது' என்பதை சட்டென்று உணர்ந்த குப்புசாமி பட்டர், மந்திரத்தில் கட்டுண்டவர் போல சிறுமியை பின்தொடர்ந்தார்.
சற்றுத்தூரம் சென்றதும், திருடனை சுட்டி காட்டிய சிறுமி, 'அதோ போகிறானே... அவன்தான் எனது தோடுகளை திருடியவன்' என்றாள். கட்டுமஸ்தான உடம்போடு ஒருவர் போய்க் கொண்டிருந்தார். ஒல்லியான உடல்வாகு கொண்ட பட்டருக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ தெரியவில்லை. விறுவிறுவென்று போய், அந்த நபரின் மூடிய கையை பற்றி இழுத்துக் கடித்தார்.
அந்தநபர், திமிறினாரே தவிர, எதிர்த்து தாக்காமல், பிரமை பிடித்தவர் போல் அப்படியே நின்றார். அவர் கையை பிரித்து பார்த்தால், அம்மனின் ஆபரணம் ஜொலித்தது. 'திருடன் திருடன்' என்று கத்தியபடி சிறுமியை பார்த்தார் குப்புசாமி பட்டர். அவள் மாயமாக மறைந்து விட்டிருந்தாள்!
அதற்குள் அங்கிருந்த மக்கள் அந்தத் திருடனைப் பிடித்து அடிக்கத் தொடங்கினர். திருவிழாக்கும்பல். கேட்கவா வேண்டும்? ஆளாளுக்கு அடித்தார்கள். ஆனால், அந்த நபரோ, 'அடியுங்கள்... நன்றாக அடியுங்கள். அப்போதுதான் நான் செய்த பாவம் தீரும்' என்று சொன்னாரே தவிர கலங்கவில்லை. அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதிகாச, புராண காலத்தில் மட்டுமின்றி எப்போதும் தெய்வம் தனது திருவிளையாடலை நிறுத்தியதில்லை. அடியாருக்கு அருள்புரிவதன் மூலம் அது எப்போதும் தன்னை வெளிப்படுத்தவே செய்கிறது. அனுபவத்தால் இதை உணர்ந்தவர்கள், அடுத்தவர்களுக்கு சொல்கிறார்கள். அனுபவம் பெற துடிப்பவர்கள் அதை நம்புகிறார்கள். தெய்வத்தின் அருளை தாங்களும் அனுபவிக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்