search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று மனவிருப்பத்தை நிறைவேற்றும் கூடாரவல்லி விழா
    X

    இன்று மனவிருப்பத்தை நிறைவேற்றும் கூடாரவல்லி விழா

    • ராமானுஜரை, ஆண்டாள் நாச்சியாா் ‘அண்ணனே’ என்று அழைத்திருக்கிறார்.
    • 2 ஆயிரம் வருடங்களாக நிறைவேற்றப்படாத ஆண்டாளின் வேண்டுதலையும், நேர்த்திக்கடனையும் நிறைவேற்றியவர், ராமானுஜர்”

    திருப்பாவை என்றாலே நம் நினைவுக்கு வருபவர், ஆண்டாள். தன் இனிய தமிழால் அரங்கநாதனை பாடிப்பரவி, அவரையே தன் கணவனாக வரித்துக் கொண்டவர். இவர் பாடிய திருப்பாவையின் 30 பாடல்களும் சிறப்புமிக்கவை என்றாலும், அவற்றில் 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா..' என்னும் பாடல் மிகவும் போற்றுதலுக்குரியது. இந்தப்பாடலை மட்டுமே வைத்து வைணவத் தலங்களில் 'கூடாரவல்லி' என்னும் நிகழ்வு நடத்தப்படுவதை வைத்தே, இந்தப் பாடலின் அற்புதத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.

    ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில் முதல் ஐந்து பாடல்களின் வாயிலாக நோன்பு இருப்பதன் மாண்பைப் பற்றி சொல்கிறார். அடுத்துவரும் 6 முதல் 15 வரையான பாடல்களில் கண்ணனின் லீலைகளைப் பற்றி எடுத்துரைக்கிறார். அதோடு அறியாமையில் மூழ்கி உறங்கிக்கொண்டிருக்கும் ஆயர்குல பெண்களையும், மானிடர்களையும் விழித்தெழப் பாடுகிறார். 16 முதல் 25-ம் பாசுரம் வரை, கண்ணனின் மாளிகையிலும், அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கும் பலரையும் துயிலெழுப்பும் விதமாக இருக்கிறது. அதாவது நந்தகோபன், வாசல்காப்பாளன், யசோதாதேவி, நம்பின்னைபிராட்டி என்னும் திருமகள், நிறைவாக கண்ணனையும் ஆண்டாள் நாச்சியார் துயில் எழுப்புகிறார்.

    26-வது பாடலில் கண்ணனை நேரடியாக அழைத்து, ஆயர்குல பெண்கள் நோன்பு இருக்க தேவையானவற்றை பரிசாக அளிக்கும்படி கேட்கிறார். அடுத்து வரும் 27-வது பாடலில், கண்ணன் எப்படியும் தனக்கு பேரருளை தந்துவிடுவான் என்ற நம்பிக்கையில், அவன் கையைப் பிடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், கண்ணன் தன்னை கைப்பிடிக்கும் சமயத்தில் அவனின் அழகுக்கு நிகராக தானும் ஓரளவுக்காவது அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக மணம் கமழும் மலர் சூட்டி, சில ஆபரணங்களை அணிந்து தன்னை அழகுபடுத்திக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

    பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் அரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும், வெண்ணெயும் சமர்ப்பிப்பதாக கள்ளழகரிடம், வேண்டிக்கொள்கிறாள். தான் நினைத்தபடியே அரங்கநாதருடன் கைகோர்த்த ஆண்டாள் நாச்சியார், அரங்கனுடன் ஐக்கியமாகி விட்டார். ஆனால் கள்ளழகருக்கு அவர் சமர்ப்பிப்பதாக கூறிய அக்காரவடிசலும், வெண்ணெயும் சமர்ப்பிக்கப்படாமலேயே இருந்தது.

    ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல.. சுமார் 2 ஆயிரம் வருடங்கள் இந்த வேண்டுதல் நிறைவேறவே இல்லை. ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் இருந்து 2 ஆயிரம் வருடங்களுக்குப்பின் வந்த ராமானுஜர், ஆண்டாளின் ஆசையையும், அவரது வேண்டுதலையும் கேள்விப்பட்டார். அவர் ஆண்டாளின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக, கள்ளழகர் கோவிலின் முன்பாக வந்து அங்குள்ள அர்ச்சகரின் அனுமதியைப் பெற்று, நூறு அண்டாக்களில் அக்காரவடிசலையும், வெண்ணெயையும் சமர்ப்பித்தார். இதனால் 2 ஆயிரம் வருடங்களாக நிறைவேறாத ஆண்டாளின் வேண்டுதல், நேர்த்திக்கடன் நிறைவேறியது. அதை நிறைவேற்றியவர் ராமானுஜர்.

    கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய ராமானுஜர், அந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு திருவில்லிப்புத்தூரில் கோவில் கொண்டிருந்த ஆண்டாளை பார்ப்பதற்காகச் சென்றார். அப்போது வயது வித்தியாசம் பார்க்காத ஆண்டாள், தனக்கான வேண்டுதலை நிறைவேற்றிய ராமானுஜரை, 'அண்ணனே..' என்று அழைத்ததாக தல வரலாறு சொல்கிறது. ஒரு பெண்ணின் மனதில் உள்ள விஷயங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, அவளது தந்தைக்கு உண்டு. அதன்பிறகு அந்தப் பொறுப்பு அவளது அண்ணனுக்கு உரியது. அதனால்தான் ராமானுஜரை, ஆண்டாள் நாச்சியாா் 'அண்ணனே' என்று அழைத்திருக்கிறார்.

    அன்று முதல் திருப்பாவையின் 27-ம் நாள் பாசுரத்தில் 'பால் சோறு மூட நெய் பெய்து..' என்று இருப்பதுபோல், அக்காரவடிசலான பால்சோறு, நூறு அண்டாக்களில் சமர்ப்பிக்கும் வழக்கம், இன்றைக்கும் அழகர்மலையில் உள்ள கள்ளழகர் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. இது பிற்காலத்தில் பிற வைணவ ஆலயங்களிலும் செய்யும் ஒரு நடைமுறை வழக்கமாக மாறிப்போனது. திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருவரங்கம் அரங்கநாதர் கோவில், கள்ளழகர் ஆலயங்களில் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த வைபவத்தின் போது, 120 லிட்டர் பால், 250 கிலோ அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை சேர்த்து, பலமணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் கள்ளழகருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

    'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்

    பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

    நாடு புகழும் பரிசினால் நன்றாக

    சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே

    பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

    ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

    மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்'

    மேற்கண்ட இந்தத் திருப்பாவையின் 27-வது பாடலை, அதற்குரிய மார்கழி 27-ந் தேதி, பக்தா்கள் அனைவரும் தங்கள் இல்லங்களிலும், அருகில் உள்ள கோவில்களிலும் பாடி வழிபடலாம். அதோடு பால்சேறு எனப்படும் அக்காரவடிசல் செய்து, இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து, அக்கம் பக்கத்தினர் அனைவருக்கும் பகிர்ந்து உண்ணலாம். கூடாரவல்லி தினம் என்பது கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக, ஆண்டாள் உறுதியாக நம்பிய நன்னாள். ஜீவாத்மா- பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொள்வது உறுதி என்பதை நிரூபித்த நிகழ்வு தினம் இது. இந்த நாளில் பெண்கள் புத்தாடை அணிந்து ெகாள்வதும், அணிகலன்கள் பூட்டிக்கொள்வதும் வாழ்வில் ஒளியேற்றும். ஆண்டாளின் மன விருப்பத்தை, அரங்கநாதர் வந்து நிறைவேற்றிக்கொடுத்ததுபோல, இந்த நாளில் வேண்டிக்கொள்ளும் ெபண்களின் மனவிருப்பத்தை, ஆண்டாளே நிறைவேற்றித் தருவார் என்பது நம்பிக்கை.

    "2 ஆயிரம் வருடங்களாக நிறைவேற்றப்படாத ஆண்டாளின் வேண்டுதலையும், நேர்த்திக்கடனையும் நிறைவேற்றியவர், ராமானுஜர்"

    Next Story
    ×