search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தான தர்மத்தை வலியுறுத்தும் அட்சய திருதியை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தான தர்மத்தை வலியுறுத்தும் அட்சய திருதியை

    • 'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள்.
    • பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும்.

    மகாத்மாவான தருமரை, துரியோதனன் தன் தாய்மாமன் சகுனியின் உதவி கொண்டு சூழ்ச்சி செய்து சூதாட்டத்தில் தோற்கடித்தான். இதனால் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தது. அவர்கள் அஸ்தினாபுரத்தில் இருந்து திரவுபதியோடு வடக்கு நோக்கி யாத்திரையை தொடங்கினார்கள். அப்போது இந்திராதி தேவர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் மற்றும் மிகுந்த பற்றுள்ள மக்களும் பாண்டவர்களின் பின் சென்றனர்.

    பஞ்சபாண்டவர்கள் அவர்களை நோக்கி, "உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். எனது அருமை மக்களே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்" என்று வேண்டிக்கொண்டனர்.

    ஆனால் மக்களோ, பாண்டவர்களை நோக்கி பலவிதமாக புகழ்ந்தனர். அப்போது தருமர் அவர்களிடம், "நீங்கள் அன்பால் என்னை இவ்வாறு புகழ்கிறீர்கள். எங்களிடம் இல்லாத உயர்ந்த குணங்களை கூட எங்களிடம் உள்ளது போல் சொல்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். இருப்பினும் நீங்கள் திரும்பி செல்லுங்கள்" என்று கூறினார். பின்பு பஞ்ச பாண்டவர்கள், கங்கை கரையில் இருந்த பிரமாணக்கோடி என்னும் ஆலமரத்திற்கு அருகில் சென்று, அன்று இரவை அங்கேயே கழித்தனர்.

    அப்போதும் சில அந்தணர்களும் குறிப்பாக அக்னி ஹோதிரிகள் (தினமும் யாகம் செய்யக்கூடிய அந்தணர்களும்) மற்றும் அவர்களது உறவினர்களும் திரும்பி செல்லாமல் நூற்றுக்கணக்கில் பாண்டவர்களுடன் வந்தனர். அவர்களை நோக்கி தருமர், "ராட்சசர்கள் மற்றும் கொடிய மிருகங்கள் வசிக்கும் இந்த இடத்தில் எங்களுடன் ஏன் வருகிறீர்கள்" என்று கேட்டாலும், அவர்களின் அன்பான பேச்சால் மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் ஒரு காரியம் அவர் மனதை நெருடியது. "சன்னியாசிகளும், அந்தணர்களும், உறவினர்களும் நம்முடன் வருகின்றனர். இவர்களின் பசியை போக்க வேண்டியது எனது கடமை. தர்ம சாஸ்திரத்தில் விதித்தபடி தேவர்களுக்கும், நம்மை தேடி வந்த விருந்தினர்களுக்கும், நாய்களுக்கும், காக்கைக்கும், அன்னம் இடாவிட்டால் மகா பாவம். எனவே இதற்கு என்ன செய்யலாம்" என வருத்தப்பட்டார்.

    அப்போது சவுனகர் என்ற மகா முனிவர் அங்கு வந்தார். அவர் தருமரை நோக்கி, "தவத்தின் மூலம் உன் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். யோக சித்தியை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தவத்தின் மூலம் அடைய முடியாதது எதுவுமில்லை" என்றார்.

    இதையடுத்து தருமர் தன் புரோகிதரான தவுமியரிடம் ஆலோசனை கேட்டார். தவுமியரோ, "தர்ம ராஜாவே.. பிராணிகள் எல்லாம் ஒரு சமயம் கடும் பசியால் துன்பமடைந்த பொழுது, சூரியபகவான் அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் கொண்டு பூமியில் மேக ரூபமாக மாறி மழை நீரை வெளிப்படுத்தினார். அந்த மழை நீரால் பூமி செழித்து, அனைத்து ஜீவ ராசிகளின் பசியும் தீர்ந்தது. சூரியன் அன்ன ரூபம் ஆனவர். அனைத்து உயிரையும் காக்கக்கூடியவர். எனவே நீ அவரை நோக்கி தவம் செய்" என்றார்.

    தருமரும் ஒரு மனதுடன் அன்ன ஆகாரம் இன்றி சூரிய பகவானின் விசேஷமான 108 நாமத்தை கூறி தவம் இயற்றினார். பின்னர் சூரிய பகவானை நோக்கி, "12 ஆதித்யர்களும், 11 ருத்திரர்களும், அஷ்டவசுக்களும், இந்திரனும், பிரஜாபதியும், ஆகாசத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களும், உங்களை ஆராதித்து சித்தி அடைந்தனர். தங்களை ஆராதிப்பதால் ஏழு வகை பித்ருக்களும் திருப்தி அடைகின்றனர். தாங்கள் எனக்கு உதவ வேண்டும்" என்று தருமர் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு சூரிய பகவான், "தர்மராஜா.. நீ வேண்டியது அனைத்தும் உனக்கு கிடைக்கும்படி செய்கிறேன். இப்பொழுது நான் தரும் பாத்திரம் உனக்கு 12 ஆண்டு வரை சக்தி உள்ளதாக இருக்கும். இந்த பாத்திரத்தை பெற்றுக்கொள். இதில் நீ இடும் பழமோ, கிழங்கோ, கீரையோ, காய்கறிகளோ அல்லது அவற்றை கொண்டு தயார் செய்த உணவோ, தான் உண்ணாமல் திரவுபதி அந்த உணவை பரிமாறிக் கொண்டே இருக்கும் வரை, அது வளர்ந்து கொண்டே இருக்கும். இன்றைய தினத்தில் இருந்து நீ இதை பயன்படுத்தலாம்" என்றார்.

    தருமரும் ஒரு அடுப்பு மீது அந்த பாத்திரத்தை வைத்து சமையல் தயார் செய்தார். அதில் தயாரித்த உணவு சிறிய தாக தோன்றினாலும், அந்த பாத்திரத்தின் சக்தியால் அது வளர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் உணவளித்த பிறகு மீதமிருந்த அன்னத்தை பிரசாதமாக தருமரும் மற்றவர்களும் சாப்பிட்டனர். இறுதியாக திரவுபதி சாப்பிட்டாள். அட்சய பாத்திர மகிமையால் அங்கிருந்த அனைவரும் பசி நீங்கி மகிழ்ந்தனர்.

    தருமர், மற்றவர்களின் பசியை தீர்க்க சூரிய பகவானிடம் இருந்து, சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அன்று அட்சய பாத்திரம் பெற்றதால் அந்த தினம் 'அட்சய திருதியை' என அழைக்கப்பட்டது.

    'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய இந்த திருதியை மிக விசேஷமானது. அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளோ, அபிஷேகமோ, ஜபமோ, ஹோமமோ மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களைத் தரும். அன்றைய தினம் ஏழைகளுக்கு வழங்கப்படும் அன்னதானம், நீர் மோர் போன்றவை நமக்கு குறைவற்ற செல்வத்தை பெற்றுத் தரும். சிலர் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் அது தானத்தையும், தர்மத்தையும் தான் சிறப்பாக சொல்லியுள்ளது.

    முன்னோர்களின் (பித்ருக்களின்) பிரீதிக்காக நீர் நிறைந்த ஒரு செப்பு பாத்திரத்தை தானம் செய்வார்கள். இதற்கு 'தர்மகட தானம்' என்று பெயர். இதனால் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் தாகமின்றி இருப்பார்கள். ஒரு செப்பு பாத்திரத்தில் அல்லது கலசத்தில் நல்ல நீரை நிரப்பி ஏலக்காய் மற்றும் வாசனை திரவியங்களை சேர்த்து அதற்கான மந்திரத்தை சொல்லி தானம் அளிப்பது மிகச் சிறப்பானது.

    இந்த நாளில் எந்தவிதமான பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல் அனைவருக்கும் அன்னதானம் அளிப்பது உயர்ந்த பலனை தரும். மேலும், பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும். இறந்த முன்னோர்களுக்கு நல்ல கதி உண்டாகும். வேதம் படித்த பெரியோர்களுக்கு குடை, விசிறி, நீர் மோர் போன்றவை அளிப்பார்கள். மேலும் அட்சய திருதியை அன்று தான் கிரத யுகம் ஆரம்பித்த நாள். எனவே அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    - 'ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

    Next Story
    ×