என் மலர்
வழிபாடு

மகா சிவராத்திரி விரத பலன்கள்!

- முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம்.
- சிவனின் அருளும், நினைத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.
சிவ பெருமானுக்குரிய எட்டு முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம் ஆகும். இது சிவ பெருமானுக்கு விருப்பமான இரவாக கருதப்படுகிறது. தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் ஈசனை பூஜித்து, வழிபடும் காலமாகும். அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவ பூஜை செய்வது சிறப்பு.
மகா சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும் கண்விழித்து, சிவ பெருமானை வழிபடுவதால் மகா சிவராத்திரியில் விரதம் இருந்து, கண் விழித்த பலனும், சிவனின் அருளும், நினைத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

மகா சிவராத்திரி:
சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாள் மகா சிவராத்திரி தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாப்படுகிறது. சிவ பெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளையே மகா சிவராத்திரி தினமாக கொண்டாடுவதாக புராணங்கள் சொல்கின்றன.
இந்த நாளில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் மாலை துவங்கி, இரவு முழுவதும் சிவ பெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும்.
மகா சிவராத்திரி விரத பலன்கள்:
மகா சிவராத்திரி அன்று நாள் முழுவதும் சிவனை வேண்டி விரதம் இருந்து, வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். துன்பங்கள் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவ பெருமானின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக மகாசிவராத்திரி விழா கருதப்படுகிறது. அதுவும் மகா சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிவ பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் அப்படியே நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

சிவராத்திரி பூஜை:
சிவ பெருமானை, காலத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுவது உண்டு. அதனால் சிவ வழிபாடு செய்வதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டியது கிடையாது. ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட எந்த கெட்ட நேரங்களின் பாதிப்பும் சிவ வழிபாட்டை பாதிக்க முடியாது.
மகா சிவராத்திரி பூஜைகள் என்பது மாலை 6 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை 6.30 வரை நடைபெறும். மொத்தம் நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கால பூஜையும் சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும்.
சிவனை வழிபட ஏற்ற நேரம்:
மகா சிவராத்திரியின் நான்கு கால பூஜைகளில் மிகவும் முக்கியமானது மூன்றாம் கால பூஜை தான். இது நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, அதிகாலை 3 மணி வரை நடைபெறும். இந்த மூன்றாம் காலத்தின் முதல் 50 நிமிடங்கள் மிக மிக முக்கியமானதாகும்.
இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைக்கு நிஷித கால பூஜை என்று பெயர். இது தான் சிவ பெருமானை வழிபடுவதற்கு மிக மிக ஏற்ற நேரமாகும்.
இந்த ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி மகா சிவராத்திரி அமைந்துள்ளது. அன்றைய தினம் இரவு 12.09 முதல் 12.59 வரையிலான நேரத்தில் சிவனிடம் நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நடைபெறும்.
விரதத்தை நிறைவு செய்யும் நேரம்:
மகா சிவராத்திரி பூஜையில் மூன்றாம் கால பூஜை என்பது பார்வதி தேவி, சிவ பெருமானை வழிபட்ட காலமாகும். அந்த சமயத்தில் நாமும் வழிபட்டால் சிவபெருமானின் அருளும், பார்வதி தேவியின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகா சிவராத்திரி விரதம் பிப்ரவரி 27-ந் தேதி காலையில் தான் நிறைவடையும். அதனால் அன்று காலை 7 மணிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வதால் செல்வ வளமும், சிவ பெருமானின் அருளும் கிடைக்கும்.