search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ரமலான் தரும் நன்மைகள்
    X

    ரமலான் தரும் நன்மைகள்

    • ரமலான் மாதத்திற்கு தனிப்பெரும் சிறப்புகள் பல உண்டு.
    • புனிதமான குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்று கூறுகிறது.

    இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்திற்கு தனிப்பெரும் சிறப்புகள் பல உண்டு. சிறப்புமிக்க அந்த நாட்களை நாம் கொஞ்சமும் வீணாக்கி விடக்கூடாது என்பது தான் இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று.

    இந்த மாதத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் இப்படி: "ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ முடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.

    ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க விரும்புகின்றானே தவிர சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

    மேலும், தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள் மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்து வதற்காகவும் (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்". (திருக்குர்ஆன் 2:185)

    இந்த மாதம் சாதாரணமான மாதம் அல்ல. அது புனிதமான குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்று கூறுகிறது. அது இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேத புத்தகம். குர்ஆன் என்பது ஓதிப்பார்ப்பதற்கு மட்டும் அல்ல, அது ஓதப்பட்டு அதில் உள்ளபடி அமல் செய்ய வேண்டும் என்பது தான் அதன் குறிக்கோள் ஆகும்.

    அதே போன்று தான் இந்தப் புனித ரமலான் மாதத்தின் முப்பது நோன்புகளும் முறையாக நோற்கப்பட்டு குறையின்றி பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் நோக்கமாகும். ரமலான் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் பல வழிகளில் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

    நோன்பிற்கு அதிகமான சிறப்பும், மகத்தான பன்மடங்கு கூலியும் உண்டு, நோன்பை மதித்து, கண்ணியப்படுத்தும் விதத்தில் அல்லாஹ் அதனை தனக்குரியது என கூறியுள்ளான். நபிகள் நாயகம் அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் நபிமொழி வழியாக கூறினார்கள்.

    `ஆதமுடைய மகனின் செயல்கள் அனைத்திற்கும் நன்மை பன்மடங்காக வழங்கப்படும். ஒரு நன்மை பத்தாக, அதிலிருந்து எழுநூறாகக்கூட பெருகும். ஆனால் நோன்பைத் தவிர, ஏனெனில் அது எனக்குரியது, அதற்கு நானே கூலி வழங்குவேன், ஏனெனில் அவனது ஆசை மற்றும் உணவை எனக்காகவே அவன் விட்டிருக்கின்றான்'.

    'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன; ஒன்று அவன் நோன்பு திறக்கும் போது, மற்றது தனது இறைவனை அவன் சந்திக்கும் போது'. இப்படியெல்லாம் பல்வேறு சிறப்புகள் ரமலான் நோன்புக்கு உண்டு. அவற்றின் சிறப்புகளை நாம் தான் புரிந்து கொண்டு சரிவர செயல்பட வேண்டும்.

    நோன்பைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது: 'நீங்கள் நோன்பை முழுமையாக நிறைவேற்றுங்கள்' என்று கூறுகின்றான். நோன்பு என்பது சும்மா பசித்திருப்பதல்ல, அது ஒரு இறைவணக்கம். எனவே அதை நாம் மிக கவனமுடன் மிகச்சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

    'நோன்பு ஒரு கேடயமாகும். தவறான பேச்சு பேச வேண்டாம். யாராவது உம்மிடம் சண்டைக்கு வந்தால் `நான் நோன்பாளி' என்று அவரிடம் கூறிவிடவும்' (நூல்: புகாரி)

    நோன்பின் மூலம் பசித்திருப்பதால் ஏழ்மையின் வழி உணரப்பட்டு, ஏழை, வறியவர், அநாதை, என்று தேவையுள்ளவர்களைத் தேடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதை நோன்பு கற்றுக்கொடுக்கிறது.

    இப்படியாக இந்த நோன்புக்குள் எண்ணற்ற நன்மைகள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக கடைசி பத்து நாட்கள் மிகவும் முக்கியமானவை. அதனால் தான் "ஆயிரம் மாதங்களுக்கு நிகரான நன்மைகளை வழங்கும் 'லைலத்துல் கத்ர்' எனும் புனித இரவு இந்த இறுதி பத்து நாட்களில் தான் அடங்கி இருக்கிறது. அதை நீங்கள் தேடிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.

    இதனால் தான் இஃதிகாப் (தனித்திருத்தல்) என்ற அமலை இஸ்லாம் அறிமுகம் செய்திருக்கிறது என்பது இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது.

    சமுதாய சமநிலைத் திட்டங்களைக் கற்றுத்தரும் புனித ரமலான் நோன்பைப் புரிந்து முழு உலகிலும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வாழ்வாங்கு வாழ்வோமாக.

    Next Story
    ×