என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
சிதம்பரத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுடன், நடராஜர் திருநடனம் புரிந்து காட்சி
- இன்று பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.
- நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. சிவபெருமானின் பஞ்ச சபையில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது.
பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் தனிசிறப்புகள் வாய்ந்தது.
ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரான நடராஜரே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் பிறகு தினமும் சாமி வீதிஉலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி 4 வீதியில் வலம் வந்தனர்.
தேரோட்டம் முடிந்ததும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு எழுந்தருளினார்கள். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 4.45 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.
இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து மாலை 5.20 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.
அப்போது சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி திருநடனம் புரிந்தபடி தரிசனம் அளித்தார். இந்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...! நடராஜ பெருமானே...!, சிவ, சிவ... ஓம் நமச்சிவாய என்று விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர்.
இதையடுத்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவில் இன்று (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசன் தீட்சிதர், துணை செயலாளர் சேதுஅப்பாசெல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்