search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பட்டாசு இல்லாத தீபாவளியா? வாய்ப்பே இல்லை
    X

    பட்டாசு இல்லாத தீபாவளியா? வாய்ப்பே இல்லை

    • தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான்.
    • தீபாவளியை களைகட்டச் செய்வது பட்டாசுதான்.

    பட்டாசு வெடிப்பது ஏன்?

    ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டு உள்ளது. திதிக்கு சூரிய சந்திரர்கள் மட்டுமே முக்கியம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம். சதுர்தசியில் குளித்து விட்டு எம தர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும்.

    தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். ஆனால் அந்த பட்டாசுகள் இல்லாமலும் தீபாவளி கொண்டாடலாமா என்றால் வாய்ப்பே இல்லை என்கின்றனர் நம்ம வீட்டு குட்டீசுகள். தீபாவளி பண்டிகை வருவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பாகவே பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

    தீபாவளியைக் களைகட்டச் செய்வது பட்டாசுதான். பட்டாசு இல்லாத தீபாவளி, திரியில்லாத புஸ்வானம்போல, சுரத்தே இல்லாமல் போய்விடும். பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் அப்பாக்களுக்கும் ஏன் தாத்தாக்களுக்கும் கூட ஆவல்தான். ஆனால் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்காவிட்டால் தீபாவளியின் தித்திப்பு காற்றில் கரைந்துவிடும்.

    பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பது தொடர்பாக தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வருவதால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால் விபத்துகளும் குறைந்து வருகிறது என்று தெரியவருகிறது.

    `காற்று மாசு ஏற்படும்' என்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. இதனால் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறையும் என்றாலும், அந்த குறைவான நேரத்திலும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கவனமாகக்கையாளாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும்.

    கை, கால்களில் காயம், ஆடைகளில் தீப்பிடிப்பது போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. புஸ்வானம், தரைச்சக்கரம் போன்றவை சிலநேரங்களில் வெடிக்கக்கூடும். அந்தத் தீப்பொறி பட்டு கண்கள் பாதிகப்படலாம். பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    பட்டாசு வெடிக்கும் பகுதியில் ஒரு வாளி தண்ணீரை எப்போதும் வைத்திருக்க வேண்டும். சிறுவர்கள், பெரியவர்களின் துணையுடன் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். புடவை, பட்டுப்பாவாடை போன்ற தளர்வான ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது.

    பருத்தி ஆடை, ஜூன்ஸ் பேண்ட் அணிந்து கொள்ளலாம். பட்டாசு வெடிக்கும்போது காலில் செருப்பு அணிவது அவசியம்.

    கம்பி மத்தாப்புகளைக் கொளுத்தி முடித்ததும் வாளியில் உள்ள தண்ணீரில் போட்டுவிட வேண்டும். வெடிக்காத பட்டாசு களை கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. அதன்மீது உடனே தண்ணீர் ஊற்றிவிட வேண்டும். எந்த பட்டாசுகளையும் கைகளில் வைத்து வெடிக்கக் கூடாது.

    சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளைப் போட்டு வைத்துக் கொண்டு பட்டாசுகளைக் கொளுத்தக் கூடாது. நீளமான ஊதுவத்தியைப் பயன்படுத்தி தூரமாக நின்று பட்டாசைக் கொளுத்த வேண்டும்.

    பட்டாசு கொளுத்திய பிறகு கிடக்கும் குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாக வைத்துக் கொளுத்தக்கூடாது.

    பட்டாசு விபத்து ஏற்பட்டால் அந்த காயத்தின்மீது தண்ணீர் ஊற்றவேண்டும். அதன்பிறகு காயம்பட்ட இடத்தைச் சுத்தமான பருத்தித்துணியைக் கொண்டுமூடி, காயம்பட்டவரை உடனே மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவேண்டும். எந்த காரணம் கொண்டும் காயம் ஏற்பட்ட இடத்தில் பேனா மை, எண்ணெய், பற்பசை, ஐஸ்கட்டி, மஞ்சள், மாவு போன்ற எதையும் தடவக்கூடாது.

    வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், தண்ணீர் அருகில் இல்லை என்றால், தீப்பிடித்தவர்களை ஒரு கம்பளியில் சுற்றி தரையில் உருட்டவேண்டும். கம்பளி சுற்றிய பகுதிக்குள் ஆக்சிஜன் செல்ல முடியாமல், தீ அணைந்துவிடும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். எனவே பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்க முடியாது. அதே நேரத்தில் நாம் அனைவரும் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுவோம்.

    Next Story
    ×