என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
பேசாதே...புறம் பேசாதே...! (நபி)
- நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள் பவன்.
- நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
மனிதன் தன்னைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப் படுவதை விட அடுத்தவர்களைப்பற்றி அறிந்து கொள்வதில்தான் அதிக நேரத்தை செலவளிக்கின்றான், அடுத்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வது தவறல்ல ஆனால் அது நல்லுறவுக்காக இருந்தால் தான் நல்லது, அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்து கொண்டு புறம் பேசுவதற்காக இருந்தால் அது நல்லதல்ல.
'யாரைப்பற்றியும் தவறான செய்திகளை என்னிடம் சொல்லாதீர்கள், நான் மன நிம்மதியுடன் இருக்கவே விரும்புகிறேன்' என்று நபிகள் நாயகம் சொன்னது அந்த அர்த்தத்தில் தான்.
அல்லாஹ் தனது திரு மறையில் கூறுகின்றான்: 'விசுவாசிகளே! (சந்தேகமான) பல எண்ணங்களில்இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்; மேலும், உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள் பவன்; மிக்க கிருபை செய்பவன்' (திருக்குர்ஆன் 49:12).
மேற்கண்ட இறை வசனம் சகமனிதர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக சொல்லிக்காட்டுகிறது. நாம் பிறரின் குறைகளை பார்க்கத் தொடங்கும் போது தான் நம்மை அது புறம் பேசத்தூண்டுகிறது. எனவே அடுத்தவர்களின் நிறைகளை காண்பதில் அதிக கவனம் செலுத்துவதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
இதனால் தான் நபிகள் நாயகம் இப்படி சொன்னார்கள்: 'யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது அவர் வாய் மூடி இருக்கட்டும்' (நூல்: புகாரி, முஸ்லிம்).
எனவே அடுத்தவர்களைப் பற்றி அவர் என்ன செய்கிறார், இவர் எங்கே போகிறார் என்று தேவையில்லாமல் துருவித்துருவி ஆராய்வது இறைவிசுவாசிக்கு நல்ல பழக்கமல்ல. சுப்யான் இப்னு அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் நபி களாரிடம், 'இறைத் தூதரே! நான் எதற்கு அதிகம் பயப்பட வேண்டும்? என்று கேட்ட போது, தமது நாவை பிடித்துக் காட்டி 'இதைத் தான்' என்று நபிகளார் சொன்னார்கள்'. (நூல்: திர்மிதி)
பின்வரும் நபிமொழி உண்மையில் புறம் என்பது என்ன என்பதைப் பற்றி கூறுகிறது.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
புறம் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, `அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் நன்கு அறிவார்கள்' என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபிகளார், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் `புறம்' என்றார்கள். நான் கூறுவது எனது சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகளார் 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லை என்றால் நீ அவனைப் பற்றி அவதூறு கூறுகிறாய்' என்றார்கள். (நூல்: முஸ்லிம்)
எனவே நமது நண்பர்களிடம் குற்றங் குறைகள் இருந்தால் அவற்றை யாரோ ஒருவரிம் சொல்லிக் கொண்டிருக்காமல் குறையுடன் சம்பந்தப்பட்டவரையே நேரில் சந்தித்து அவரிடமுள்ள குறைகளை பக்குவமாக எடுத்துச் சொன்னால் நிச்சயம் அவர் ஏற்றுக்கொள்ளத் தான் செய்வார்.
அந்தக் குறைகளை வேறு ஒருவரிடம் பேசும் போது அது தெரியாதவர்களுக்கும் தெரிய வருகிறது, நாளடைவில் அது வீட்டுச் சண்டையாகவும் சில நேரங்களில் ஊர்ச் சண்டையாகவும் கூடமாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தான் வாயை திறக்கும் விஷயத்தில் நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். இதன் பாதிப்பு இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும், ஏன் நமது மண்ணறையிலும் கூட தொடரும் என்பதை பின்வரும் நிகழ்வு உணர்த்திக்காட்டுகிறது...
இப்னு அப்பாஸ் (ரலி) சொன்னார்கள்: "நபிகளார் இரண்டு மண்ணறைகளைக் கடந்துசென்றபோது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய பாவத்திற்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது (மர்ம உறுப்புக்களை) மறைப்பதில்லை. மற்றொருவர், புறம் பேசித்திரிந்தார்" என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபிகளாரிடம் 'இறைத் தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்ட போது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் மண்ணறை வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று நபிகளார் கூறினார்கள்" (நூல்: புகாரி)
புறம் பேசுவது என்பது எவ்வளவு கொடியது என்று இதன் மூலம் நாம் விளங்க முடிகிறது, ஆகவே தான் நபிகள் நாயகம் 'புறம் பேசுபவன் சுவனத்தில் நுழையமாட்டான்' என்று சொன்னார்கள். எனவே இனியேனும் நாம் அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவதைத் தவிர்த்து அறம் பேசுவோம். அது தான் இன்றைய அவசரத் தேவையும் கூட.
வாருங்கள் புறம் பேசுவதை தடுப்போம்...! அறம் பேசுவதை தொடுப்போம்...!!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்