என் மலர்
வழிபாடு
திருவண்ணாமலையில் மலையாக வீற்றிருக்கும் ஈசன்
- எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.
- பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம்.
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்பது சொல் வழக்கு.
பஞ்சபூதத்தில் இது அக்னி தலம். சிவனே மலையாக அமைந்திருக்கும் சிறப்பு மிக்கதலமாக இதுபோற்றப்படுகிறது. அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம், கார்த்திகை தீப வழிபாடு உருவாக காரணமான மூல தலம்.
பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. திருவண்ணாமலை.
அதேநேரம் எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. எத்தனையோ சிவ தலங்கள் இருப்பினும் சித்தர்கள் பலரும் தவம் செய்யவும், ஜீவசமாதி அடையவும் திருவண்ணாமலையையே தேர்வு செய்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலை ஆன்மிக பூமியாக மட்டுமின்றி, சித்தர்கள் அருவமாக வாழும் பூமியாகவும் இருக்கிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலையானது, எப்போது தோன்றியது என்ற துல்லியமான கணிப்பு இதுவரை இல்லை.
பிரபஞ்சம் தோன்றியதில் இருந்தே இந்த மலை இருப்பதாகவும், இந்த மலை ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு விதமாக காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது.
கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகாவும் இருந்த இந்த சிவன் மலை, தற்போதைய கலியுகத்தில் கல் மலையாக நம் கண்களுக்கு காட்சி தருகிறது.
'அண்ணுதல்' என்றால் 'நெருங்குதல்' என்று பொருள். 'அண்ணாமலை' என்பதற்கு நெருங்கவே முடியாத' என்ற பொருளை தருகிறது. பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் சிவனின் அடியையும். முடியையும் நெருங்கவே முடியாததால் 'அண்ணாமலை' என்ற பெயர் பெற்றது.
'அருணம்' என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு, 'சலம்' என்றால் மலையைக் குறிக்கும். சிவபெருமான் சிவப்பு நிறத்தில் - எரியும் நெருப்பு மலையாக இருப்பதால் சிவபெருமானுக்கு அருணாச்சலேஸ்வரர்' என்ற பெயர் வந்தது.