search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தீமைகளை தடுக்கும் நற்செயல்கள்
    X

    தீமைகளை தடுக்கும் நற்செயல்கள்

    • நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது.
    • தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது.

    `நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது. ரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கிறது. உறவுமுறையினைப் பேணி, சேர்ந்து வாழ்வது ஆயுளை அதிகரிக்கிறது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரலி), நூல்: தப்ரானீ) மேற்கூறப்பட்ட நபிமொழியில் முத்தான மூன்று செயல்களும், அதனால் ஏற்படும் பயன்களும் பட்டியலிடப்படுகின்றன. அவை குறித்து காண்போம்.

    நற்காரியங்கள் புரிவது தீய மரணத்தைத் தடுக்கும்.

    நற்காரியங்கள் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

    'எல்லா நற்செயலும் தர்மமே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அறிவிப்பாளர்; ஜாபிர் (ரலி), நூல்: புகாரி). பொருளாதார உதவி, அன்னதானம், தண்ணீர், ஆடைகள் அளிப்பது, உதவி தேடி நிற்கும் துயருற்றவருக்கு உதவிடுவது, மக்களுக்கு உபகாரம் புரிவது, பிறருக்கு நலம் நாடுவது, வறியவருக்கு உதவுவது, அனாதைகளை ஆதரிப்பது, விதவை களுக்காக பாடுபடுவது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, அண்டை வீட்டாரை அரவணைப்பது, இருவருக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவது, விபத்து, ஆபத்து, பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோருக்கு தொண்டு செய்வது, வழி தவறியவருக்கு நேர்வழி காட்டுவது என்பது போன்ற செயல்பாடுகள் நற்காரியங்கள் ஆகும்.

    இவற்றை செய்வதினால் தீய மரணம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எனவே நற்காரியங்கள் புரிவது அவசியமாகும். நற்காரியங்களால் மட்டுமே தீய மரணங்களை தடுக்க முடியும் என்பது நபி மொழியாகும். 'நற்காரியங்கள் புரிவது தீய மரணத்தையும், பேராபத்துகளையும், பேரழிவு களையும் தடுக்கிறது. மேலும், இவ்வுலகில் நன்மை உடையவர்கள் மறுமையிலும் நன்மை உடையவர்களே ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: தப்ரானீ)

    ரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தைத் தணிக்கும்.

    `யார் தங்களின் பொருட்களை (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'. (திருக்குர்ஆன் 2:274)

    `இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத நாளான மறுமைநாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கின்றான். அவர்களில் ஒருவர், தம் வலக் கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு ரகசியமாகச் செய்பவர் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    'நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ, தொழுகையை நிலைநாட்டு கிறார்களோ நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து ரகசியமாகவும், வெளிப்படையாகவும் (தர்மமாக) செலவு செய்கிறார்களோ அவர்கள் என்றும் அழியாத ஒரு வியாபாரத்தை ஆதரவு வைக்கிறார்கள்'. (திருக்குர்ஆன் 35:29)

    `நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) 'கொடுக்கலும் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை கடைப்பிடிக்கவும், நாம் அவர் களுக்கு அளித்தவற்றில் இருந்து ரகசியமாகவும், பகிரங்கமாகவும் (தான தர்மங்களில்) செலவு செய்யட்டும்' என்று நீர் கூறுவீராக'. (திருக்குர்ஆன் 14:31)

    உறவுகளைப் பேணி வாழ்வது ஆயுளை அதிகமாக்கும்

    `தம் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி).

    `தம் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி).

    `உறவு என்பது அளவிலா அருளாளன் இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னுடன் ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்' என்று கூறினான். இவ்வாறு நபி (ஸல்) தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    `ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதரே! என்னை சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற்செயலை எனக்குக் கூறுங்கள்' என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் 'உறவைப் பேணி வாழ வேண்டும்' என்று கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஅய்யூப் அன்சாரி (ரலி), நூல்: புகாரி)

    `உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: சுபைர் பின் முத்யிம் (ரலி), நூல்: புகாரி)

    நபிகளார் கூறிய முத்தான இந்த மூன்று நற்செயல்களை நமது வாழ்வில் கடைப்பிடிப்போம். எதிர்பாராத விதமாக வரக்கூடிய தீய மரணங்களை தவிர்ப்போம். திருக்குர்ஆன் காட்டிய வழியிலும், நபிகள் நாயகம் வாழ்ந்த வழியிலும் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் நற்பேறுகளைப்பெறுவோம்.

    Next Story
    ×