என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம்- 7 ஆகஸ்ட் 2024
- ஆடிப்பூர தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
- சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்பு பெற்ற திருத்தலம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இந்த திருத்தலமும் ஒன்று. மங்களாசாசனம் பெற்ற கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் தான், ஆண்டாளுக்கு 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற சிறப்பு பெயர் கிடைக்கப்பெற்றது.
இங்குள்ள மூலவர் வடபத்ரசயனர் (ரெங்கமன்னார்). இவர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரு சேர காட்சி அளிப்பது இந்த தலத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெற்றாலும், ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா 12 நாட்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும்.
கொடியேற்றுவதற்கு 2 நாட்கள் முன்னதாகவே ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தேரோட்ட திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 10-ம் தேதி (சனிக்கிழமை) நிறைவடைகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் எந்த அளவிற்கு பிரசித்தி பெற்று விளங்குகிறதோ, அந்த அளவிற்கு இவ்வாலயத்தின் தேரும் பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குகிறது.
தேரோட்டத்திற்கு 45 நாட்களுக்கு முன்னதாகவே, தேரை தயார்படுத்தும் பணி, அலங்கரிக்கும் பணி தொடங்கி விடும். இந்த ஆண்டு தேரில் உள்ள பழைய வடங்கள் அகற்றப்பட்டு புதிய வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொதுவாக அனைத்து கோவில்களிலும் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக தேர் இருக்கும். ஆனால் ஆண்டாள் கோவிலில் பெருமாளும், அம்பாளும் ஒரு சேர மணக் கோலத்தில் காட்சி அளிப்பார்கள். அதனால், இவ்வாலயத்தில் ஒரே ஒரு தேர்தான்.
அதில்தான் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் எழுந்தருளுகின்றனர். இது வேறு எங்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு ஆகும். மணக்கோலத்தில் வீற்றிருக்கும் ஆண்டாளை தரிசித்தால், நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆண்டாள் கோவில் தேரில் ராமாயணம், மகாபாரதத்தில் வரும் காட்சிகள் பல சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. அதேபோல ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு, 64 கலைகள் குறித்த சிற்பங்கள் அனைத்தும் இந்த தேரில் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த தேர் 94 அடி உயரம் கொண்டது. தேரில் 4 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சக்கரமும் 1 டன் எடை கொண்டது. பழங்காலத்தில் இந்த தேருக்கு 9 மரச் சக்கரங்கள் இருந்தன. ஆனால் தற்போது 4 இரும்பு சக்கரங்கள் உள்ளன.
தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய தேர் இதுவாகும். தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து பரிவட்டம் வருவது வழக்கம்.
பழங்காலத்தில் இவ்வாலயத்தின் தேரோட்டம் ஆடி மாதத்தில் தொடங்கி ஐப்பசி மாதம் வரை நடந்துள்ளது. சுமார் 4 மாதங்கள் கழித்து தான், தேர் நிலைக்கு வந்துள்ளது. அந்த நான்கு மாத காலமும், ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருக்கும் என்பதுதான் உச்சபட்ச சிறப்பு.
அதுபோல முன்காலத்தில் சுற்றுவட்டார கிராமத்தில் எங்கு இருந்து பார்த்தாலும் தேர் தெரியுமாம். இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, ஆடிப்பூர கொடியேற்றம் நடைபெறும் அன்றே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைவார்கள்.
ஆண்டாள் கோவிலை சுற்றியுள்ள மண்டபங்கள், நந்தவனங்களில் குடும்பத்துடன் தங்குவார்கள். கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்கள், அப்படியே ஆங்காங்கே தங்கி இருந்து தினமும் நடைபெறும் சுவாமி வீதி உலாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்வர்.
பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுப்பர். தேர் நிலைக்கு வந்த பிறகுதான் அனைவரும் தங்களின் ஊருக்கு புறப்பட்டுச் செல்வார்கள். இது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வழக்கமான நிகழ்வுதான். அந்த வகையில் இந்த ஆண்டு 15 ஆயிரம் பக்தர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
விழாவின் ஆரம்ப நாள் முதல் தேரோட்டம் வரை, அதாவது 9 நாட்கள் இங்கு தங்கியிருக்கும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதனை 'ததீயாராதனம்' என்று அழைப்பர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தோரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
பெருமாள் அருகில் கருடாழ்வார்
பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், பெருமாள் சன்னிதிக்கு எதிரில் தான் கருடாழ்வார் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் பெருமாளுக்கு அருகில், அவரை வணங்கியபடி கருடன் காட்சி தருகிறார்.
சூடிக்கொடுத்த நாச்சியார்
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையானது, வருடத்தில் ஒரு முறை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது அங்குள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. மதுரையில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது கள்ளழகருக்கும் இந்த மாலை சாற்றப்படுகிறது.
அதேபோல தினமும் வடபத்ரசயனருக்கும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஆண்டாளுக்கு 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற பெயர் ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்