search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா வரலாறு
    X

    மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா வரலாறு

    • பூலாத்தி செடிகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டதால் பூலுடையார் சாஸ்தா.
    • புத்திரபாக்கியம் அருளக்கூடிய சாஸ்தா.

    சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னாள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பகுதியை சேர்ந்த 7 பேர் தொழில் நிமித்தமாக கேரளாவிற்கு சென்றனர். அங்கிருந்து பொருளீட்டுக்கொண்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த ஊரை சேர்ந்தவர்கள் இந்த 7 பேரும் திருடர்கள் என்று நினைத்து அவர்களை தாக்க முயன்றனர்.

    அதுமட்டுமல்லாமல் இதுநாள்வரைக்கும் அவர்கள் சேர்த்துவைத்திருந்த பொருட்களையும் எடுக்க முயன்றனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து அவர்களை துரத்திக்கொண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் அந்த பகுதியில் ஓங்கி உயர்ந்து அடர்த்தியாக வளர்ந்துள்ள பூலாத்தி செடிகள் நிறைந்த புதருக்குள் நுழைந்து மறைந்து கொண்டனர்.

    அவர்களை துரத்திக்கொண்டு வந்தவர்கள் புதரின் அருகில் வந்து பார்த்தனர். அங்கு யாரையும் காணவில்லை. அப்போது திடீரென்று யானை ஒன்று பிளிரக்கூடிய சத்தம் ஒன்று கேட்டது. உடனே இவர்களை துரத்திவந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த இடத்தைவிட்டே சென்றுவிடுகின்றனர்.

    அதைக்கண்டதும் அந்த 7 பேரும் தப்பித்துவிட்டோம் என்று புதரில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அந்த 7 பேரின் கண்களுக்கு மண்ணால் ஆன சாஸ்தா சிலை தென்பட்டது. இந்த சாஸ்தா தான் நம்மை காப்பாற்றியது. யானை உருவில் வந்தது இந்த சாஸ்தான். எனவே இந்த சாஸ்தாவை நம் ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முடியு செய்தனர்.

    உடனே அந்த 7 பேரும் சாஸ்தா சிலையை எடுத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டு சென்றார்கள். அவர்கள் மலையாள நாடுவிட்டு நாஞ்சில் நாட்டிற்கு வந்தனர். அங்கிருந்து அஞ்சுகிராமம், ராதாபுரம், திசையன்விளை, சாஸ்தான் குளம் வந்தார்கள். அடுத்தது அங்கிருந்து அமுதுண்ணாகுடி கிராமத்திற்கு வந்தனர்

    அங்கு அந்த 7 பேரும் தாங்கள் கொண்டுவந்த சாஸ்தா சிலையை இறக்கி வைத்துவிட்டு உணவு சமைத்து சாப்பிட்டனர். சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்த பிறகு பயணத்தை தொடர்ந்தனர். அப்போது சாஸ்தா சிலையை எடுக்க முயன்றபோது அந்த பகுதியில் இருந்த சுரைக்காய் செடி காலை இடறிவிட்டது. இதனால் சாஸ்தா சிலையின் கால் பகுதி உடைந்து கீழே விழுந்தது.

    பாதம் விழுந்த சாஸ்தா சிலையுடன் அந்த 7 பேரும் பயணத்தை தொடர்ந்தனர். இப்படி ஒவ்வொரு பகுதியாக கடந்து மதியவேளையில் கடம்பாகுளம் பகுதிக்கு வந்தனர். மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பலாம் என்று நினைத்து கடம்பாகுளம் பகுதியில் சாஸ்தா சிலையை இறக்கி வைத்தனர்.

    மதிய உணவை முடித்துவிட்டு கடம்பாகுளம் பகுதியில் இருந்து கிளம்ப தாயாராகி சாஸ்தா சிலையை எடுக்கும்போது சாஸ்தா சிலையில் இடுப்பிற்கு கீழ் பகுதி அந்த இடத்திலேயே பதிந்துஇருந்தது. சாஸ்தா சிலையில் தலை மற்றும் மார்புடன் கூடிய பகுதியை மட்டும் தான் அவர்களால் எடுக்க முடிந்தது.

    அந்த பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு கடம்பாகுளம் பகுதியை விட்டு கிளம்பினார்கள். அடுத்து ஸ்ரீவல்லப ஏரியில் மறுகால் பாயக்கூடிய தலைப்பகுதியில் இருக்கக்குடிய மலைமேல் உள்ள பாறையின் மீது தாங்கள் கொண்டு வந்த சாஸ்தா சிலையை வைத்துவிட்டு அந்த 7 பேரும் அவர்களுடைய ஊருக்கு சென்றுவிட்டனர்.

    அந்த சிலையை ஊருக்குள் கொண்டுசெல்லக்கூடாது என்று சொல்லி வனப்பகுதியிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இப்படி நாட்கள் கடந்துகொண்டே சென்றது. அப்போது ஒரு நாள் அந்த பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த மணியாச்சி ஜமீன் பசுமாடு ஒன்று தினமும் மலைமீது ஏறி அங்குள்ள சாஸ்தா சிலையின் மீது பாலை சொறிந்துவிட்டு கீழே இறங்கி சென்றுவிடும். இப்படி தினமும் அந்த பசுமாடு பாலை சொறிந்துவிட்டு சென்றுகொண்டிருந்தது.

    ஒருவாரம் கழித்து மேய்ப்பவர் ஜமீனிடம் போய் இந்த பசுமாடு மட்டும் காலையில் தான் பால் தருகிறது. மாலையில் பசுவின் மடுவில் பாலே இல்லை என்று கூறினார். உடனே ஜமீன் அந்த மாட்டில் உள்ள பாலை யாராவது கறக்கிறார்களா? அல்லது மாடு மேய்ப்பவர்களே பாலை கறந்து விற்கிறார்களா என்று நினைத்துக்கொண்டு அவர்களை கவனிப்பதற்காக 5 நபர்களை ஜமீன் அனுப்பி வைத்தார்.

    அன்றும் வழக்கம்போல் பசு மலைமேல் உள்ள சாஸ்தா சிலையின்மீது பாலை சொறிந்துகொண்டிருந்தது. பசுவின் இந்த செயலை மாடுகளை மேய்ப்பவர்களும், அந்த 5 நபர்களும் வியப்புற்று பார்த்தனர். உடனே இந்த தகவலை ஜமீனிடம் தெரிவித்தனர்.

    மறுநாள் ஜமீன் வந்து பார்த்தார். அன்றும் பசு மலைமேல் உள்ள சாஸ்தா சிலைக்கு தானே பாலை சொறிந்தது. அவருடன் ஊராரும் அந்த செயலை வியந்து பார்த்தனர். சிலையை கொண்டுவந்து வைத்த அந்த 7 பேரும் மக்களோடு மக்களாக நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த பசுவின் செயலையும், சாஸ்தாவின் மகிமையையும் கண்டு மெய்சிலிர்த்து நிற்கும் போது கூட்டத்தில் இருந்த ஒருவர் மீது சாமி அருள் வந்து ஆடினார்.

    நான் சாஸ்தா வந்திருக்கிறேன் என்றும் எனக்கு இங்கு பூரணபுஸ்கலையுடன் சிலை அமைத்து கோவில் எழுப்ப வேண்டும் என்றும், எனது கோட்டைக்கு காவலாய் கொம்பன்மாடசாமி, கருப்பன், சுடலைமாடன் உள்ளிட்ட 21 பந்தி தெய்வங்களுக்கும் நிலையம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    அவர்கள் சொன்னமாதிரியே கோவில் எழுப்பப்பட்டது. ஏரியின் மறுகால் பாயக்கூடிய பகுதி தலைப்பகுதி என்பதால் ஏரியின் மறுகால் பகுதியில் சாமியின் தலை இருந்ததாலும் இந்த ஊர் மறுகால்தலை என்று அழைக்கப்பட்டது. பூலாத்தி செடிகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டதால் இங்குள்ள சாஸ்தா பூலாத்தி செடியிடை கண்டெடுத்த சாஸ்தா என்றும், பூலாத்தி சாஸ்தா என்றானது. இதுவும் காலப்போக்கில் மறைந்து பூலுடையார் சாஸ்தா என்றும் அழைக்கப்பட்டது.

    இங்குள்ள பூலுடையார் சாஸ்தா தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு புத்திரபாக்கியம் அருளக்கூடிய சாஸ்தாவாக இருக்கிறார். நாமும் அவரை வழிபடுவோம். அவர் அருள் பெறுவோம்.

    Next Story
    ×