search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பெற்றோரை மதிப்போம்... நன்மை பெறுவோம்...
    X

    பெற்றோரை மதிப்போம்... நன்மை பெறுவோம்...

    • முதியோர் இல்லங்களில் வாழும் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.
    • நம்மை சுயபரிசோதனை செய்யக்கூடிய கேள்வி இது.

    மனிதன் தன்னுடைய வாழ்வில் நன்மைகள் அனுபவிப்பதற்கும், சுகத்தோடு எல்லாவித வளமோடு வாழவும், அவன் தன் பெற்றோரை மதித்து நடக்க வேண்டும்.

    நாம் ஒவ்வொருவரும், நண்பர்களிடத்தில் அன்பாகவும், வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளை மதித்தும் நடக்கின்றோம், பணிவுடன் பேசுகின்றோம். ஆனால், நம்மைப் பெற்றெடுத்து, வளர்த்து, தங்கள் முழு உழைப்பையும் நமக்காகவே செலவழித்த தாய், தந்தையரிடம் அன்பாகவும், அவர்களை மதித்தும் நடக்கின்றோமா?

    நம்மை சுயபரிசோதனை செய்யக்கூடிய கேள்வி இது. வேதாகமம் மூலம் இந்த கேள்விக்கு நாம் விடை பெறலாம்.

    "உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவி கொடு, உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே" (நீதிமொழிகள் 23:12)

    "தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்தி விடுகிறவன் இலச்சையையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்" (நீதிமொழிகள் 19:26)

    "உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்து இருப்பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக" (எபேசியர் 6:2,3)

    இவ்வாறு வேதாகமம், தாய் தந்தையரை மதிக்கவேண்டும், அவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்த வேண்டும், அவர்கள் தேவையை அறிந்து அவர்கள் கேட்காமலே நாம் அவர்களை அன்புடன் கவனிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

    ஆனால் இன்றைக்கு நடப்பது என்ன?

    பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தன்னைப்பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையருக்கு வயதாகும் போது பலர் அவர்களை கவனிப்பதில்லை. ஒரு வேளை சாப்பாடு கூட கொடுக்காமல், அவர்களைத் திக்கற்றவர்களாக துரத்தி விடும் கல் நெஞ்சக்காரர்களும் இருப்பதை செய்தித்தாள்கள் மூலம் அறிகிறோம்.

    இதுகுறித்து வேதாகமம் கூறுகின்றது;

    "எவனாகிலும் தகப்பனையாவது, தாயையாவது நோக்கி நான் உனக்கு செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாக (பணம்) கொடுக்கிறேன்" என்று சொல்லி, தன் பெற்றோரை கவனிக்காமல் இருந்தால், அவன் தேவனுடைய கட்டளையை மதிக்காமல் இருக்கிறான் என்பது பொருளாகும்.

    பெற்றோரின் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு, அவர்களை நேரில் போய் பார்த்து நலம் விசாரிக்காமல் இருப்பது, அல்லது அவர்கள் வயதாகி பலம் குன்றியவுடனே முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது, அல்லது தாய், தந்தையாரின் அருகில் இருந்தும் அவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடும் நிகழ்வுகள் பாவமான செயல்களாகும்.

    தன் மகனை, மகளைப் பார்க்க மாட்டோமா? பேரப்பிள்ளைகளை கொஞ்ச மாட்டோமா? என்று ஏக்கப் பெருமூச்சோடும், கண்ணீர் நீரூற்றோடும் தனிமையிலும், முதியோர் இல்லங்களிலும் வாழும் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.

    இன்றைக்கு நம் பெற்றோருக்கு நாம் எதைச் செய்கின்றோமோ, அது நாளைக்கு நம் வாழ்விலும் நடக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    "தங்கள் தகப்பனைப் பரியாசம் பண்ணி, தாயின் கட்டளைகளை அசட்டை பண்ணுகிற கண்ணை, நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்" (நீதிமொழிகள் 30:17) என்று வேதம் எச்சரிக்கிறது.

    வாருங்கள் நண்பர்களே, நம் வாழ்வு வளம் பெறவும், சுகமாய் வாழவும், இறைவனால் மேன்மை பெறவும், நம் பெற்றோரை மதித்து, அன்புடன் நடத்தி அரவணைப்போம். தேவனின் அருளும், பெற்றோரின் அன்பும் நம்மை மேன்மைப்படுத்தி வாழ்வில் வெற்றிகளைத்தரும்.

    நெல்லை மானக்ஷா.

    Next Story
    ×