search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றத்தில் `அரோகரா கோஷத்துடன் நடந்த கந்த சஷ்டி தேரோட்டம்
    X

    திருப்பரங்குன்றத்தில் `அரோகரா' கோஷத்துடன் நடந்த கந்த சஷ்டி தேரோட்டம்

    • 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
    • மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சண்முகார்ச்சனைகள் நடைபெற்றன.


    விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக கடந்த 6-ந்தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல் சூரசம்கார லீலையை கண்டு களித்தனர். தொடர்ந்து கோவிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

    இதையடுத்து பூ சப்பரத்தில் எழுந்தருளி சுப்ரமணிய சுவாமி தெய்வானை உடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்டத்தேரில் எழுந்தருளினார். காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து கிரிவலப் பாதை வழியாக இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் அதனைத் தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் நடைபெறுகிறது.

    காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அதிகாலையில் மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்கா வலர் குழு தலைவர் சத்திய பிரியா பாலாஜி, அறங்கா வலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×