search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது
    X

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது

    • கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.
    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திரு விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா முதல் நாளான நாளை அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார்.

    7 மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது.

    மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு ஜெயந்தி நாதருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது.

    காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 க்கு விஸ்வரூபம் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

    காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் பல்வேறு அபிஷேக பொருட்க ளால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

    பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30-க்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது.

    தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    8-ம்திருவிழா இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும் அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.

    9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவமும் 12-ம் திருவிழா மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.



    விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே 18 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பாதுகாப்பிற்கு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×