என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது
- அனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம்.
- பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு.
கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் கடைபிடித்த பலனை பெறுகின்றனர். கந்தசஷ்டி விரதத்தின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. 'சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்' என்ற பழமொழிக்கு உண்மையான பொருளானது, சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் அகப்பையான கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
'மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் எந்தநாளும் ஈரெட்டாய் வாழ்வர்' என்ற கந்தசஷ்டி கவச வரிகள் மூலம் குழந்தை செல்வம் உள்பட அனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம் என அறியலாம். கந்தசஷ்டி விரதம் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி வளர்பிறையில் 6 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
ஆணவம் மிகுந்த சூரனை முருகபெருமான் 6 நாள் போருக்குப்பின் சம்ஹாரம் செய்தார். சூரனை வதம் செய்த இடம் என்பதால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரபத்மனுடன் முருகன் 6 நாட்கள் போர் புரிந்தபோது, அவரது பக்தர்கள் திருச்செந்தூரில் விரதம் இருந்து தியானித்தனர். அதன்படி, தற்போதும் கந்தசஷ்டியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்.
சூரசம்ஹாரத்தின்போது சூரபத்மன் மீது முருகபெருமானின் வேல் பாய்ந்ததும், அவனிடம் இருந்த அஞ்ஞானம் மறைந்து மெய்ஞானம் வரப்பெற்றான். உடனே அவனை அழிக்காமல் சேவலாகவும், மயிலாகவும் முருகபெருமான் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும் மயிலை வாகனமாகவும் மாற்றினார்.
பகைவனை கொல்வது சஷ்டி விரதம் அல்ல. பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு. யானைமுக சூரனை வெல்வது மாயையை ஒழிப்பதாகவும், சிங்கமுக சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகவும், சூரபத்மனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகவும் கருதப்படுகிறது. உண்ணா நோன்பு இருந்தால் ஆணவம் அடங்கும். ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும் இந்த உயரிய தத்துவத்தை விளக்குவதே கந்த சஷ்டி ஆகும்.
இந்த நிகழ்வினை அனைவரும் அறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பக்தர்களின்றி எளிமையாக நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை தரிசிக்க தலையா? கடல் அலையா? என்று பிரமித்து கூறும் வகையில் பல லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடுகின்றனர்.
சூரசம்ஹாரம் முடிந்ததும் 6 நாட்களாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்கின்றனர். 7-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) இரவில் கோவில் ராஜகோபுரம் முன்பாக சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு மூலவரிடம் இருந்து வேல் வாங்கி அன்னையிடம் வைத்து பூஜை செய்து சுப்ரமணியசாமி வேலை பெற்று கொண்டு சூரசம்காரத்திற்கு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு தேவர் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி முதலா வதாக தாராகசூரன் வதம், 2-தாக பானு கோபம் வதம், 3-வதாக சிங்கமுக சூரன் வதம், 4-வதாக சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
ஊட்டி லோயர் பஜார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாலை 6.05 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதி, வேளிமலை குமாரகோவில், வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், முருகன்குன்றம் கோவில், மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவில், தோவாளை செக்கர்கிரி முருகன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
6-ம் நாள் விழாவான இன்று பிற்பகல் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் இன்று மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரத்திற்கு வாகனத்தில் சாமி எழுந்தருளல், 6.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் இன்று மாலை 3 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும்.
அதே போல் சென்னையில் உள்ள கந்தசாமி கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் தலங்களில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்