search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றம் மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது
    X

    திருப்பரங்குன்றம் மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது

    • சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிகிறார்கள்.
    • இன்று காலை 11.15 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11.15 மணியளவில் ரதவீதிகளில் திருக்கார்த்திகை தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து தரிசனம் செய்கிறார்கள். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    இதற்காக உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள தீபமண்டபத்தின் நாலாபுறமும் வெள்ளை அடிக்கப்பட்டு சிவப்பு வர்ணம் பூசப்பட்டு தயார்நிலையில் உள்ளது. மேலும் தீபத்துக்காக மூன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை, 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியில் தயாரான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

    இதற்கிடையே நேற்று திருவண்ணாமலையில் இருந்து தீப நிபுணா் குழுவினர் 4 பேர் வந்து திரியை நெய்யில் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று திருக்கார்த்திகை தினம் என்பதால் பக்தர்கள் குவிகிறார்கள். பக்தர்களிடையே கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பெரிய ரதவீதியில் கோவில் அலுவலகம் அருகே 2 பிரிவாக தடுப்பு ஏற்படுத்தி தர்ம தரிசனம் மற்றும் ரூ.100 செலுத்தக்கூடிய கட்டண சிறப்பு தரிசனம் என்று 2 வழிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வழக்கமான பிரதான வழியில் கருப்பணசுவாமி சன்னதி அருகே கோவிலுக்குள் செல்வதற்கும், மடப்பள்ளியையொட்டி பெரிய கதவு வழியாக வெளியேறுவதற்கு உள்ளே - வெளியே என்று ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை, கோவில் மற்றும் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×