search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்போம் (நபி)
    X

    சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்போம் (நபி)

    • உன்னத படைப்பாக மனிதன் திகழ்கின்றான்.
    • திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது.

    இறைவன் எண்ணற்ற படைப்புகளை இந்த உலகில் படைத்துள்ளான். அவற்றில் உன்னதப் படைப்பாக மனிதன் திகழ்கின்றான். எந்தபடைப்புக்கும் கொடுக்காத ஒரு தனித்துவத்தை மனிதப் படைப்புக்கு இறைவன் கொடுத்துள்ளான். அதுவே சிந்திக்கும் திறனும், ஆற்றலும். சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தும் மனிதன் மனம்போன போக்கில் அலைகிறான். இறை கட்டளைகளுக்கு மாற்றமாக நடக்கின்றான்.

    உலகத்தின் மீது கொண்டிருக்கும் மோகம் தான் சிந்தனைத் திறன் பழுதடைவதற்குக் காரணம். இதனால் மறுமையை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

    அல்லாஹ் கூறுகின்றான்: ``பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளி நிறைந்த பெருங்குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது". (திருக்குர்ஆன் 3:14)

    உலக ஆதாயங்களையே குறிக்கோளாகக் கொண்டு அனேகமானோர் அலைந்துகொண்டிருப்பதற்கான காரணம் இதுதான். மறுமை எனும் புதையலை அடைந்துகொள்ள வேண்டுமெனில் இம்மை வாழ்வில் சரியான விளைச்சலை நாம் விதைக்க வேண்டும். இது கட்டாயம்.

    ஆனால் நம்முடைய தேடலும், சிந்தனையும் இம்மையை மையமாகக் கொண்டே சுழல்வதால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.

    நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வின் பார்வையில் இந்த உலகம் கொசுவின் இறக்கை அளவுக்கு ஈடாக இருக்கும் என்றிருந்தால், அவனை நிராகரிக்கும் நிராகரிப்பாளருக்கு அவன் ஒரு மிடர் தண்ணீரைக் கூட அருந்துவதற்குக் கொடுத்திருக்க மாட்டான்". (நூல்: அஹ்மத்)

    இதன் அடிப்படையில் எது குறித்து அதிகமாக சிந்திக்க வேண்டும் என்பதை இந்த நபிமொழி அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. ஆகவேதான் மற்றொரு முறை நபி (ஸல்) கூறினார்கள்: "எவன் இம்மையை நேசிக்கிறானோ அவன் தன் மறுமையை அழித்துக்கொள்வான்.

    எனவே மக்களே! நீங்கள் அழிந்துவிடக்கூடிய வாழ்க்கைக்குப் பகரமாக, நிலையான வாழ்வையே தேர்ந்தெடுங்கள். அதாவது மறுமையை உங்கள் குறிக்கோளாய் ஆக்கிக்கொள்ளுங்கள்".

    இதனையே அல்லாஹ் இவ்வாறு உறுதிப்படுத்துகின்றான்: "(நபியே!) நீர் கூறும்: "இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு.

    அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள். அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 3:15)

    மனிதனின் சிந்தனைதான் செயல்வடிவமாக மாறுகிறது. அதன் அடிப்படையில்தான் அவன் தன் வாழ்வையும் அமைத்துக்கொள்கிறான். நன்மையான விஷயங்கள் குறித்து சிந்தித்தால் நன்மைகளைச் செய்வான். தீமைகளை சிந்தித்தால் துர்பாக்கியமே மிஞ்சும். சிந்தனையின் சிறப்பு குறித்து இறைவன் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையாக அறிவுறுத்துகிறான்.

    "நபியே! இவர்களிடம் கூறும்: "நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை அறிவுறுத்துகின்றேன். நீங்கள் அல்லாஹ்வுக்காக தனித்தனியாகவோ இருவரிருவராகவோ சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்" (திருக்குர்ஆன் 34:46)

    "இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கின்றான்; நீங்கள் இம்மை - மறுமை பற்றி கருத்தூன்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக!" (திருக்குர்ஆன் 2:219,220)

    "அவர்கள் குர்ஆனைப் பற்றி சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்". (திருக்குர்ஆன் 4:82)

    மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மதங்கள் சில வரையறைகளை வைத்திருக்கலாம். ஆனால் இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் தெளிவாக அறிவுறுத்தி வழிகாட்டுகிறது, கற்றுக்கொடுக்கின்றது.

    கற்றுக்கொள்வதன் மூலமும், கற்றுக்கொடுப்பதன் மூலமும் மட்டுமே மனிதன் பகுத்தறிவு கொண்டவனாக மாறுகின்றான். அந்த பகுத்தறிவுதான் அவனை சிந்திக்க வைக்கிறது. ஆகவேதான் இஸ்லாத்தைப் பொறுத்தவரை நல்ல சிந்தனையும் ஒரு வணக்கமே. நல்ல சிந்தனைதான் அடிப்படையில் இருந்தே ஒரு மனிதனை மாற்றுகிறது. எனவே சிந்தித்து செயல்படுவோம்!

    Next Story
    ×