search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முருகப்பெருமான் வழிபட்ட குகநாதீஸ்வரர்
    X

    முருகப்பெருமான் வழிபட்ட குகநாதீஸ்வரர்

    • முருகப்பெருனை `குகன்’ என்றும் அழைப்பார்கள்.
    • சிவலிங்கம் 5½ அடி உயரம் கொண்டது.

    கோவில் தோற்றம்

    கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகிலேயே இருக்கிறது இந்த குகநாதீஸ்வரர் கோவில். முருகப்பெருமானை `குகன்' என்றும் அழைப்பார்கள். அந்த குகன் வழிபட்ட சிவபெருமான் அருளும் ஆலயம் என்பதால், இது 'குகநாதீஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

    இவ்வாலயத்தில் இருக்கும் இறைவனுக்கு, `கோனாண்டேஸ்வரன்', `குகனாண்டேஸ்வரன்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவ்வாலயத்தின் கருவறை குகை போன்று காணப்படுவதாலும், பிரகாரம் குறுகி இருப்பதாலும் இவ்வாலய இறைவன் `குகநாதீஸ்வரர்' என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

    இந்த கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்னும் அமைப்பைக்கொண்டது. கோவிலின் முன்பு சிறிய தோட்டம் இருக்கிறது. இவ்வாலய மூலவர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சிவாலயங்களிலேயே, இந்த ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கம்தான் மிகப்பெரியது என்று சொல்கிறார்கள். இவ்வாலய சிவலிங்கம் 5½ அடி உயரம் கொண்டது. இங்கு அருள்பாலிக்கும் அன்னையின் திருநாமம், 'பார்வதி' என்பதாகும்.

    ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், கஜலட்சுமி, வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், துர்க்கை, நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக அருள்கின்றனர்.

    இங்குள்ள கல்வெட்டு ஒன்று, இவ்வாலய இறைவனை, `ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வர முடையார்' என்று நீண்ட அடைமொழியோடு குறிப்பிடுகிறது.

    இந்த கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரியில் நிலவியபோது, இந்த குகநாதீஸ்வரர் கோவிலுக்கு, அவர்கள் திருப்பணி செய்ததும் இந்த கல்வெட்டில் காணப்படுகிறது.

    10-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த ஆலயத்தில் வழிபாடு நடந்திருக்கலாம் என்கிறார்கள், ஆய்வாளர்கள். இவ்வாலயத்தில் முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளன.

    கோடை வெயில் அதிகரிக்கும் காலத்தில் இத்தல இறைவனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேக இளநீர், பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அன்று கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை, சங்கு பூஜையும் நடக்கும்.

    ஐப்பசி மாத பவுர்ணமியில் இத்தல இறைவனை வழிபட்டால் குடும்ப பிரச்சனை நீங்கும் என்கிறார்கள். கார்த்திகை சோம வாரத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    இவ்வாலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு தனிச்சன்னிதி உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியில் காரைக்கால் அம்மையாருக்கு இத்தலத்தில் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.

    மனமுருகி வேண்டும் எல்லா பிரார்த்தனைகளையும், இத்தல இறைவன் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திருமணத் தடை நீக்கும் ஆலயமாகவும் இத்தலம் உள்ளது.

    தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் இவ்வாலயம் திறந்திருக்கும்.

    Next Story
    ×