search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நவராத்திரி வழிபாட்டின் மகத்துவம்
    X

    நவராத்திரி வழிபாட்டின் மகத்துவம்

    • ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் நவராத்திரி வழிபாடு.
    • வீரம், செல்வம், கல்வி என்ற முப்பெரும் சக்திகள்.

    யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்

    தீதுநன்மை எல்லாம் காளி தெய்வ லீலையன்றோ

    பூதம் ஐந்துமானாய் காளி பொறிகள் ஐந்துமானாய்

    துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய்

    -என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முப்பெரும் தேவியர்களும் ஒன்றாகி நாம் ஒவ்வொருவருடைய துன்பங்களையும், தொல்லைகளையும் போக்கி இன்ப வாழ்வு வழங்க நவராத்திரி விழாவையே நாம் கொண்டாடுகிறோம்.

    மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு

    நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும், இச்சா சக்தி. துர்க்கை- வெற்றியின் தேவதை, வீரத்தின் தெய்வம் சிவப்பிரியை. மகிசன் என்னும் அரக்கனை 9 இரவுகள் போரிட்டு வெற்றி கண்டவள். கிரியா சக்தி- திருமகள் விஷ்ணுபிரியை, செல்வத்தின் உறைவிடமே இவரின் இருப்பிடம். ஞானசக்தி-சரஸ்வதி பிரம்மாவின் பிரியை, ஆயகலைகளுக்கும், கல்விக்கும் அதிபதி. வீரம், செல்வம், கல்வி என்ற முப்பெரும் சக்திகள் தான் இந்த உலகத்தையே ஆள்கின்றனர்.

    இந்த முப்பெரும் சக்திகளின் வழிபாடான, நவராத்திரியை தான் 9 நாட்கள் நாம் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். வருடத்தில் 4 நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி, புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரி மகா நவராத்திரி என்றும் சாரதா நவராத்திரி என்றும் கூறுவர். தை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை ஷியாமளா நவராத்திரி என்றும், சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

    வருடத்தில் 4 நவராத்திரிகள் இருந்தாலும், இரண்டு நவராத்திரிகளை கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று தேவிபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் குளிர்காலம் ஆரம்பமாகின்ற மாதம், அதேபோல சித்திரை மாதம் கோடையின் துவக்க காலம். இந்த இரு மாதங்களும் எமதர்மனின் கோரை பற்கள். இந்த இரு மாதங்களில் தான் நோய்கள் அதிகமாக பரவும் என்று அக்னி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பருவ காலம் மாறும்போது நோய்கள் அதிகம் பரவும். எனவே இந்த இரு மாதங்களில் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று நீண்ட ஆரோக்கியமாக வாழ அருள் தரக்கூடியள் தான் அகிலாண்ட நாயகியான அம்பிகை. அதனால் தான் புரட்டாசி, சித்திரை மாதங்களில் வரக்கூடிய நவராத்திரியை கொண்டாட வேண்டும் என்று நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றோம்.

    காலப்போக்கில் எல்லா நவராத்திரியும் மறைந்துபோய் புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி மட்டும் வழக்கத்தில் உள்ளது. நவராத்திரி விழாவை தெய்வங்களும், தேவர்களும் கூட கொண்டாடி பலன் அடைந்துள்ளனர். ராமபிரான் நவராத்திரி பூஜை செய்து தான் சீதை இருக்கக்கூடிய இடத்தை கண்டறிந்தார் என்று தேவி பாகபதம் தெரிவிக்கிறது. கண்ணபிரானுக்கு வந்த துன்பம் நவராத்திரி பூஜை செய்ததால் தான் நீங்கியது. இந்த நவராத்திரி பூஜை செய்ததால் தான் பஞ்சபாண்டவர்கள் பாரதப்போரில் வென்றார்கள் என்று நம்முடைய புராணங்கள் பதிவு செய்துள்ளன.

    தீய சக்திகள் மேலோங்கும் போது மக்களை காப்பாற்றிட அம்மனை வேண்டினால் அகிலாண்ட நாயகியாக அன்னை சண்டிகையாக 9 வடிவங்கள் எடுத்து தீமைகளை அழித்து நன்மை செய்வாள் என்று தேவி மகாமத்யம் அழகாக விவரிக்கிறது. இதுபோன்ற நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபாடு செய்கிறோம்.

    முதல் நாள்- தேவி மகேஸ்வரி பாலா

    இரண்டாம் நாள்- கவுமாரி ராஜராஜேஸ்வரி

    மூன்றாம் நாள்- கல்யாணி

    நான்காம் நாள்- மகாலட்சுமி, ரோகிணி

    ஐந்தாம் நாள்- வைஷ்ணவி மோகினி

    ஆறாம் நாள்- இந்திராணி

    ஏழாம் நாள்- மகா சரஸ்வதி சுமங்கலி

    எட்டாம் நாள்- நரசினி

    ஒன்பதாம் நாள்- லிலிதா பரமேஸ்வரி

    இவ்வாறு 9 நாட்களும் அம்பிகையை இவ்வாறு அலங்கரித்து அழைக்கப்படுகிறாள்.

    நவராத்திரி பெருவிழாவின் 9-வது நாள் மகாநவமி அன்று நாம் செய்யும் தொழிலையும், கல்வியையும், கலையையும் மதிக்கும் வண்ணம் அதற்கு நாம் வழிபாடு செய்கின்றோம். விஜயதசமி நாளில் தான் அம்பிகை, மகிஷாசுரன், அரக்கர்கள், சிம்ப, நிசும்பன் அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள்.

    பாண்டவர்கள் தங்களுடைய வெற்றிக்காக தங்களுடைய ஆயுதங்களை துர்க்கா தேவி முன்னிலையில் தான் வழிபட்டனர். நவராத்திரியின் 9 நாட்களில் பூஜை விரதத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பூஜை, விரதத்தை கடைபிடிக்காதவர்கள் அஷ்டமி நாளிளாவது விரதம் இருக்கலாம். நவராத்திரியில் திருமகளை துதித்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களையும் தந்து முக்தி கிடைக்கும்.

    புரட்டாசி மாத நவராத்திரியின் போது கொலு வைப்பது என்பது பரம்பரையாக செய்யப்பட்டு வரக்கூடிய பக்தி நிகழ்வு. எல்லாருடைய நட்பையும் பெருகச்செய்வது தான் இந்த கொலுவின் முக்கிய நோக்கமே. நவராத்திரி கொண்டாடுவதால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மீது குழந்தைகள் வரை அனைவருக்குமே பங்குண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை உணர்வு, பக்தியும் அதிகரிக்கிறது.

    நவராத்திரியினால் ஆன 9 இரவுகள் தனி சக்தியாக விளங்கக்கூடிய ஜகன் மாதா 10-வாது நாள் இறைவனாகிய சிவபெருமானை வணங்கி சிவசக்தியாக, அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமானுடன் ஐக்கிய ரூபினியாக மாறுகிறார். இதுதான் நவராத்திரி புராண வரலாறு.

    Next Story
    ×