search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-3)
    X

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-3)

    • மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) நினைவு கூரப்படுகிறார்கள்.
    • ரமலான் பிறை 3-வது தினத்தில் அன்னை இறைவனடி சேர்ந்தார்கள்.

    பாத்திமா (ரலி) அவர்களின் தியாகம்

    புனித ரமலான் மாதம் பிறந்துவிட்டால், அதன் மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். ஹிஜ்ரி 11-ம் ஆண்டில் ரமலான் பிறை 3-வது தினத்தில் புதன்கிழமை அன்று அன்னை அவர்கள் தமது 25-ம் வயதில் (கி.பி. 632 நவம்பர் 21) பூமியின் மடியிலிருந்து இறைவனடி சேர்ந்தார்கள்.

    அன்னை பாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர் களுக்கும் பிறந்த கடைக்குட்டி செல்லக் குழந்தை ஆவார். நபி (ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்த ஓராண்டிற்குப் பின் நபி (ஸல்) அவர்களின் 41-ம் வயதினிலே அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.

    இவர்கள் சிறுவயதிலேயே தமது தந்தையின் மார்க்கக் கொள்கையை, ஓரிறைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு முஸ்லிம் பெண்மணியாக நடந்து கொண்டார்கள்.

    எல்லா சூழ்நிலைகளிலும் தந்தைக்கு துணையாக, தந்தையின் சொல்படி வாழ்ந்து வந்தார்கள். தந்தையின் சொல்லும், செயலுமே நல்வழி காட்டும் என்பதை உணர்ந்து அதன்படி நடந்தார்கள்.

    தமது தாயின் மரணத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் சோதனையான காலகட்டங்களில் தாய்க்கு நிகராக இருந்து ஆறுதல் அளித்து வந்தார்கள். நிழலாக இருந்து தந்தையை கவனித்துக்கொண்டார்கள்.

    உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் நடுப்பல் உடைக்கப்பட்டது. அவரது தலைக்கவசம் தலையின் மீது வைத்து நொறுக்கப்பட்டது. பாத்திமா (ரலி) தமது தந்தை நபி (ஸல்) அவர்களின் மேனியிலிருந்து வழிந்த ரத்தத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். பாத்திமாவின் கணவர் அலி (ரலி) ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தும் இன்னும் அது அதிகமாகிக் கொண்டே போனது. இதைப்பார்த்த பாத்திமா (ரலி) ஒரு பாயை எடுத்து, எரித்து சாம்பலாக்கி அதை நபியின் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, ரத்தப் போக்கு நின்று விட்டது. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)

    'ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். குரைஷிகளில் மோசமான ஒருவன், நபி (ஸல்) அவர்கள் சிரசை தாழ்த்தியபோது ஒட்டகத்தின் சாணத்தையும், ரத்தத்தையும், கருப்பையையும் எடுத்து வந்து அன்னாரின் இரு தோள் புஜத்தில் போட்டுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். இதைப்பார்த்து, குரைஷிகள் ஒருவர் மீது ஒரு வர்

    சாய்ந்துவிடும் அளவுக்கு சிரித்தார்கள். சிறுமியாக இருந்த பாத்திமா (ரலி) அவர் தான் அவற்றை அப்புறப்படுத்தினார். அப்புறம்தான் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். பாத்திமா (ரலி) குரைஷிகளை ஏச ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!' என்று மூன்று தடவை கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்:புகாரி)

    அலி (ரலி) அவர்களுக்கும், பாத்திமா (ரலி) அவர்களுக்கும், ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பாத்திமா(ரலி) அவர்களுக்கு 15 வயது 5 மாதங்கள் ஆகும். அலி (ரலி) அவர்களுக்கு 21 வயது 5 மாதங்கள் ஆகும்.

    பாத்திமா (ரலி) நபியின் மகள் என்பதனால் அவர்களுக்கென்று தனி சலுகைகளை நபி (ஸல்) அவர்கள் வழங்கவில்லை. 'முஹம்மதின் மகள் பாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! தருகிறேன். ஆனாலும், இறைவனின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது' என நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கனிவு, பாசம் காட்டினாலும், நீதி, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள்.

    Next Story
    ×