search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகாளய அமாவாசை: பித்ருக்களை பட்னி போடலாமா? எள்-தண்ணீர் கொடுங்கள்!
    X

    மகாளய அமாவாசை: பித்ருக்களை பட்னி போடலாமா? எள்-தண்ணீர் கொடுங்கள்!

    • 21 தலைமுறைகளில் உள்ள பித்ருக்களை சென்றடையும்.
    • தாகம் தீர எள் தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    நாளை (புதன்கிழமை) மகாளய அமாவாசை தினம். இந்த அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சிறப்பு வாய்ந்தது. ஆற்றல்கள் மிகுந்தது.

    நம்மில் பெரும்பாலானவர்கள் ஆடி அமாவாசையையும், தை அமாவாசையையும் மட்டும்தான் சிறப்பான அமாவாசை நாட்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசையை விட பலமடங்கு உயர்வானது மகாளய அமாவாசை.


    ஆடி, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்தால், நீங்கள் யாரை நினைத்து தர்ப்பணம் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே சென்றடையும்.

    ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று நீங்கள் கொடுக்கும் திதி அல்லது தர்ப்பணம் மறைந்த முன்னோர்களான உங்கள் மூதாதையர்கள் அனைவருக்கும் போய் சேரும்.

    மகாளய பட்சமான 14 நாட்கள் அல்லது மகாளய அமாவாசை நாளில் யார் ஒருவர் பித்ருக்களான நமது மறைந்த முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வழங்கும் தர்ப்பணத்தை கொடுக்கிறாரோ, அந்த எள்ளும், தண்ணீரும் அவரது முந்தைய 21 தலைமுறைகளில் உள்ள பித்ருக்களை சென்றடையும்.

    இந்த ஒரு காரணத்தினால்தான் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாத மகாளய அமாவாசை உயர்வானதாக, சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த ஆண்டு மகாளய பட்சம் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. நாளை (செவ்வாய் கிழமை) மகாளயபட்சத்தின் 14-வது நாள் நிறைவு பெறுகிறது. இந்த 14 நாட்களும் ஒவ்வொருவரும் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு எள்-தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும்.

    இந்த 14 நாட்களில் கொடுக்கும் எள்-தண்ணீர் தர்ப்பணத்துக்கு ஒவ்வொரு நாள் வரும் திதிக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். மகாளய பட்சத்தின் 14 நாட்கள் சிறப்பை உணர்ந்தவர்கள் இந்த 14 நாட்களை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள்.

    ஆனால் குடும்ப சூழ்நிலை, வேலை சூழ்நிலை காரணமாக பெரும்பாலானவர்களுக்கு மகாளய பட்ச நாட்களில் தங்கள் மூதாதையர்களான பித்ருக்களுக்கு எள்-தண்ணீர் தர்ப்பணம் கொடுக்க இயலாமல் போய் இருக்கலாம். வெறுமனே தங்கள் மூதாதையர்களை இந்த நாட்களில் வழிப்பட்டிருப்பார்கள்.


    மகாளயபட்ச 14 நாட்களில் பித்ருக்களுக்கு எள்-தண்ணீர் கொடுக்க முடியாதவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம், வருந்த வேண்டாம். இருக்கவே இருக்கிறது மகாளய அமாவாசை தினம். அக்டோபர் 2-ந்தேதி அன்று காலை கடற்கரைகள், நீர்நிலைகள் அல்லது சில ஆலயங்களுக்கு சென்று பித்ருக்களுக்குரிய தர்ப்பணத்தை கொடுக்க வேண்டும்.

    இந்த தர்ப்பணம் மகாளயபட்சம் நாட்களிலும் தர்ப்பணம் கொடுத்த பலனை உங்களுக்குப் பெற்றுத் தரும். இது மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை ஆகும்.

    மகாளயபட்ச நாட்கள் மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் மட்டுமே பித்ரு லோகத்தில் இருந்து விஷ்ணு அனுமதியுடன் பித்ருக்கள் உங்களைத்தேடி வருவார்கள். அந்த சமயத்தில் நீங்கள் அவர்களை நினைத்து தர்ப்பணம், தானம் போன்றவற்றை செய்தால் உங்கள் பித்ருக்கள் மனம் மகிழ்வார்கள்.

    நமது வாரிசுகள் நம்மை மறக்கவில்லை. நம்மை நினைத்து வழிபட்டு ஆராதனை செய்கிறார்கள் என்று மனம் முழுக்க மகிழ்ச்சியால் பூரித்துப் போவார்கள்.

    அந்த மகிழ்ச்சி காரணமாக நீங்க என்ன வரம் கேட்டாலும் அது உங்களுக்கு எளிதில் கிடைக்க உதவி செய்வார்கள். உங்கள் வாழ்க்கை அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி வகை செய்வார்கள். நீங்கள் கேட்காதவைகளை கூட பித்ருக்கள் தந்து விட்டு செல்வார்கள்.

    மகாளய அமாவாசை வழிபாடு தரும் மிகப்பெரிய பலன்கள் இது. எனவே நாளை மறு நாள் மறக்காமல் உங்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுங்கள், அன்னதானம் செய்யுங்கள், ஆடை, குடை தானம் செய்யலாம்.

    ஒரு வேளை நீங்கள் இந்த தர்ப்பணத்தை செய்யாவிட்டால் உங்கள் பித்ருக்கள், மிக மிக வேதனைப்படுவார்கள். நமது வாரிசுகள் மட்டும் மூன்று நேரமும் மூக்கு முட்ட நன்றாக சாப்பிடுகிறார்கள். பசியோடும், தாகத்தோடும் இருக்கும் நம்மை மறந்து விட்டார்களே என்று மனதில் கவலை கொள்வார்கள்.

    அந்த கவலையும், வேதனையும் தான் அவர்களது வாரிசுகளுக்கு தோஷங்களாக மாறி விடும். இதைத்தான் ஜோதிடர்கள் பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம் என்று சொல்வார்கள்.

    இத்தகைய தோஷத்தையும், பாவத்தையும் நீங்களும் உங்கள் வாரிசுகளும் ஏன் சுமக்க வேண்டும்? பித்ருக்களின் பசி, தாகத்தை தீர்க்கும் எள், தண்ணீர் தர்ப்பணத்தை செய்தாலே போதும். இந்த ஆண்டு நாளை மறுநாள் நீங்கள் உங்கள் முன்னோரைப் போற்றி தர்ப்பணம் செய்யுங்கள். அடுத்து வரும் நாட்களில் முன்னேற்றம் தானாக வருவதை கண் கூடாக பார்ப்பீர்கள்.

    நம் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளை செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.

    தற்போதைய கலிகாலம் காரணமாகவோ, என்னவோ பெற்றோர் மறைந்த பிறகு, பெரும்பாலனவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். சிலர் 3-வது நாள் விசேஷம், 16வது நாள் காரியம் என்று செய்த பிறகு கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

    பிறகு ஆண்டுக்கு ஒரு தடவை, அவர்கள் இறந்த நாளில், அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள்.


    அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் போட்டோவுக்கு மாலைப் போட்டு கும்பிட்டு விட்டு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். நாளடைவில் அந்த வழிபாடும் வம்ச வழியாக தொடரப்படாமல் போய்விடுவதுண்டு.

    அப்படிப்பட்ட அவர்களுக்கு முன்னோர் வழிபாடு என்பது ஏதோ வருடத்துக்கு ஒரு தடவை வரும் கோவில் கொடை விழா மாதிரி ஆகிவிட்டது.

    ஆனால் கண்கண்ட தெய்வங்களான நம் முன்னோர்கள் நம்மை அப்படி விட்டு விடுவது இல்லை. ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம், தினம் நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடா விட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்கா விட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யத் தவறுவதே இல்லை.

    உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள்.

    உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான், அவர்களது குடும்பம் இந்த பூ உலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள்தான்.

    நாம் கும்பிடாமலே நம் பித்ருக்கள் நமக்கு உதவிகள் செய்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிரார்த்தம் செய்து வணங்கினால் நம்மை எந்த அளவுக்கு அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.

    நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தரமாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

    நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடலாமா?

    அவர்களை பார்க்க வைத்து விட்டு, நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிடலாமா?

    அவர்களது பசியையும், தாகத்தையும், ஏக்கத்தையும் தணிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?

    மறைந்த அம்மாவும், அப்பாவும் நாம் ஏதாவது தர மாட்டோமா என்று காத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களை அப்படியே விட்டு விட்டால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்.

    அவர்கள் மீண்டும் நம் வீட்டில் இருந்து, 15 நாள் மகாளய அமாவாசை தினம் முடிந்த பிறகு பித்ருலோகத்துக்கு புறப்பட்டு போகும் போது, பசியும் பட்டினியுமாக செல்ல நேரிட்டால் அவர்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பார்கள்.

    நம்ம மகன், மகள் நம்மை கவனிக்கவே இல்லையே என்று கோபத்தில் சாபம் கூட கொடுக்க வாய்ப்புள்ளது. இதுதான் பாவமாகவும், தோஷமாகவும் மாறிவிடும்.

    இத்தகைய நிலை ஏற்பட விடலாமா? விடக் கூடாது.

    அதற்கு நாம் மகாளய பட்ச அமாவாசை தினத்தன்று கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய வகையில் அவர்கள் தாகம் தீர எள் தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்மா பலத்தை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த, வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.

    நாளை அமாவாசையில் பெரிதாக யார் கண்ணுக்கும் புலப்படாத இடத்தில் ஒரு மரத்தின் அடியில் மூன்று இலைகளைப் போட்டு, அதில் உணவை வைத்து, முதல் இலை தங்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், இரண்டாம் இலை இந்த உலகத்தில் பிறந்த மகான்கள், முனிவர்கள், ரிஷிகளுக்காகவும், மூன்றாவது இலை இந்த உலகத்தில் பிறந்து ஈம காரியம் செய்ய முடியாத ஆன்மாக்களுக்காகவும் என்று மனதாரக் கூறி சிறிய வழிபாட்டை மேற்கொள்ளும்போது, இவர்களின் வாழ்வில் அமைந்துள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். உலகத்தில் வசிக்கும் எல்லா ஜீவன்களும் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்து நன்மையளிக்கும்.

    Next Story
    ×