search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-8)
    X

    மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-8)

    • நாராயணனைப் பாடித் துதித்தால் வேண்டுபவை எல்லாம் தருவான்.
    • சிவபெருமானை நாங்கள் பாடுவது உனக்கு கேட்கவில்லையா?

    திருப்பாவை

    பாடல்:

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

    மேய்வான் பரந்தனகாண்! மிக்குள்ள பிள்ளைகளும்

    போவான் போகின்றாரைப் போகாமல்

    காத்துன்னைக்

    கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய

    பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு

    மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

    தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,

    ஆவாவென் றாராயந் தருளேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவளே! கிழக்கு வெளுத்து விட்டது. எருமைகள் பனிப் புல்லை மேயச் சென்றுவிட்டன. பாவை நோன்பிற்காக நீராடச் சென்றவர்களை போகவிடாமல் தடுத்து, உன்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறோம். குதிரை வடிவில் வந்த அரக்கனையும், சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களையும் அழித்தவனும், தேவாதி தேவனுமாகிய நாராயணனைப் பாடித் துதித்தால், அவன் நோன்பிற்குரிய அருளாசி மற்றும் நாம் வேண்டுபவை எல்லாம் தருவான். எழுந்திடுவாய்!

    திருவெம்பாவை

    பாடல்:

    கோழிச் சிலம்ப சிலம்புங் குருகெங்கும்

    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம்

    கேட்டிலையோ?

    வாழீயீ தென்ன உறக்கமோ? வாய்திறவாய்

    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கோழி கூவுகிறது. நீர்ப் பறவைகளும் சத்தமிடுகின்றன. பொழுது விடிந்து விட்டது என்பதை அறிவிக்கும் வெண்சங்கு முழங்கும் ஒலியும் கேட்கிறது. ஏழில் என்னும் இசைப் பாமாலையில் ஒப்பற்ற பரஞ்சோதியாகவும், எல்லா உலகங்களும் அழிந்துபடும் ஊழிக்காலத்திலும் கூட, முதல்வராக விளங்கும் சிவபெருமானை நாங்கள் பாடுவது உனக்கு கேட்கவில்லையா? அதுவே அவன் அன்பைப் பெறும் வழிமுறையாகும். உன் உறக்கம் என்ன உறக்கமோ? எழுந்திடுவாய்.

    Next Story
    ×