search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-10)
    X

    மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-10)

    • கண்ணனை வணங்கி, இப்பிறவியில் மகிழ்ச்சியாக வாழும் பெண்ணே!
    • அவன் உடம்பில் ஒரு பக்கத்தில் அன்னை பார்வதி உறைகிறாள்.

    திருப்பாவை

    பாடல்

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

    மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்

    நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால்

    பண்டுஒருநாள்

    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்

    தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்

    தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்!

    அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    முற்பிறவியில் பாவை நோன்பு இருந்து கண்ணனை வணங்கி, இப்பிறவியில் மகிழ்ச்சியாக வாழும் பெண்ணே! உன்னை நாங்கள் பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. எழுந்திருக்காவிட்டாலும் பரவாயில்லை, பதிலாவது சொல்லக்கூடாதா?. மணம் மிக்க துளசி மாலையை தலையில் சூடியிருக்கும் நாராயணன், நாம் வேண்டிய வரங்களைத் தருவார். முன்னோர் காலத்தில் ராமனால் எமதர்மனின் வாயில் விழுந்த கும்பகர்ணன், உனக்கு தூக்கத்தைத் தந்தானா? சோம்பல் குணம் உடையவளே! எங்கள் குலத்திற்கு அருமையான ஆபரணம் போன்றவளே! உன் தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவை திறப்பாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

    ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்

    ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    சிவபெருமானின் திருவடிகள் ஏழு பாதாள உலகங்களையும் கடந்து, சொற்களால் விளக்க முடியாத சிறப்புடன் விளங்குகின்றன. மலர்கள் நிறைய சூடிய அவன் திருமுடி எல்லாப்பொருட்களும் சென்றுசேரும் முடிவாக இருக்கிறது. அவன் ஒரே திருமேனி உடையவன் அல்ல. அவன் உடம்பில் ஒரு பக்கத்தில் அன்னை பார்வதி உறைகிறாள். அவன் அர்த்தநாரீஸ்வரன். வேதங்களும், விண்ணுலகில் உள்ளவர்களும், மண்ணுலகில் உள்ளவர்களும் பாடி துதித்தாலும், அவனது பெருமை பேசமுடியாத அளவுக்கு விரிந்து செல்கிறது. அவன் திருதொண்டர் களின் உள்ளங்களில் குடியிருப்பவன். குற்றமில்லாத குலத்தில் பிறந்து சிவாலயத்தில் பணி செய்கின்ற பெண் பிள்ளைகளே! எப்போதும் அவர்களுடன் இருக்கும் நீங்களாவது அவனுடைய ஊர் எது? அவனுடைய பெயர் என்ன? அவனைப் பாடும் தன்மை எப்படி என்று கூறுவீர்களா? அதன்படி நாங்கள் நடந்துகொள்வோம்.

    Next Story
    ×