search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • பிப்ரவரி 3-ந்தேதி நள்ளிரவு ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடக்கிறது.
    • 6-ந்தேதி காலை 6.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.

    பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா தை அமாவாசை நாளான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கோவில் முன்பு கொடிக்கம்பத்தில் குண்டம் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வெளியூர்காரர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் கொடியேற்ற விழாவில் பங்கேற்று மாசாணியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று தை அமாவாசை என்பதால் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு இன்று பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து ஆனைமலைக்கு 45 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து விடிய, விடிய பஸ்கள் சென்று கொண்டே இருந்தன. பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருவிழா தொடங்கியதை அடுத்து இன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 3-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு ஆழியாற்றங்கரையில் மயான பூஜையும், 4-ந் தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனமும், மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது.

    5-ந் தேதி காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடியிறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, 8-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×