என் மலர்
வழிபாடு

திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

- விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி நடக்கிறது.
- கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் கொடி பட்டம் வீதியுலா நடைபெற்றது. இன்று காலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30-க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், நடைபெற்றது. காலை 5.20 மணிக்கு கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, திருவாவடுதுறை ஆதீனம் சங்கரலிங்கம் தம்பிரான் சுவாமிகள், ஏரல் சேர்மன் சுவாமி கோவில் தக்கார் கருத்தபாண்டி நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, கவுன்சிலர் ரேவதி கோமதிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
5-ம் திருவிழா 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு குடை வருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழாவான 9-ந்தேதி காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்கிறார்.
அங்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர், சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருவிழா 12-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம் திருவிழாவான 14-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.