search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகாலட்சுமி செய்யும் மாவிளக்கு பூஜை
    X

    மகாலட்சுமி செய்யும் மாவிளக்கு பூஜை

    • ஸ்ரீநிவாச பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.
    • எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படும்.

    குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள பெண்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி மாதவனையும் மகாலட்சுமியையும் வழிபடுவர். ஆனால் ஸ்ரீ மகா லட்சுமியே நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று மாவிளக்கேற்றி மகாவிஷ்ணுவை வழிபடுவதை நீங்கள் எங்காவது பார்த்ததுண்டா?

    சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ அஷ்ட லட்சுமி கோவிலில் தான் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடை பெறுகிறது.

    இவ்வாலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடந்து முடிந்த பிறகு சுமார் 9 மணிக்கு மேல் இந்த வழிபாடுகள் தொடங்கும். பகல் 10 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.

    அதன் பிறகு இங்குள்ள அஷ்ட லட்சுமிகளின் சன்னதிகளில் ஒரு சன்னதிக்கு ஒரு மாவிளக்கு என்ற விகிதத்தில் எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படும். (இவற்றை ஸ்ரீ மகா லட்சுமியே ஏற்றுவதாக ஐதீகம்) பிறகு அவை அனைத்தும் ஒவ்வொன்றாக உற்சவர் ஸ்ரீ நிவாசப் பெருமாள் முன்பு கொண்டு செல்லப்பட்டு அந்த எட்டு மாவிளக்கின் தீபச் சுடர்களாலும் பெருமானின் முன்பு ஒரு பெரிய அகண்ட தீபம் ஏற்றப்படும்.

    மாலை சுமார் 5 மணியளவில் சஹஸ்ரநாம அகண்ட பாராயணம் பூஜைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி பகவானை சேவித்தலும் வரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமியே மாவிளக்கேற்றி மாதவனை வழிபடும் இந்த ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெருமாளின் திவ்ய கருணையை பெறலாம்.

    Next Story
    ×