என் மலர்
வழிபாடு
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா: 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- 6-ந்தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது.
- 7-ந்தேதி காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
26-ந்தேதி (புதன்கிழமை) மகா சிவராத்திரி, காலையில் கோபால விநாயகர் பூஜை, இரவு கொடியேற்றம், காப்பு கட்டுதல், சக்தி கரக ஊர்வலம், 27-ந்தேதி காலை மயானக் கொள்ளை, இரவு அம்மன் ஆண்பூத வாகனத்தில் வீதி உலா, 28-ந் தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.
மார்ச்-1-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறும். 2-ந்தேதி மாலை 4 மணிக்கு மேல் தீமிதி திருவிழாவும், இரவு அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 3-ந்தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
4-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி (தேரோட்டம்) வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 5-ந் தேதி காலையில் அம்மன் யானை வாகனத்தில் கோவிலை வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 6-ந்தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 7-ந்தேதி காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது. 8-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை காலையில் அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. 10-ந்தேதி மாலையில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் வீதி உலாவும், இரவு கும்பப் படையலிட்டு காப்பு களைதலுடன் மாசிப் பெருவிழா முடிவடைகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் நாதஸ்வர கச்சேரி, இன்னிசை, கலைநிகழ்ச்சிகள், நாடகம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், 7 வம்சா வழியைச் சேர்ந்த மீனவ முறை பூசாரிகள் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.