search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பஞ்சாயதன பூஜை செய்யும் முறை...!
    X

    பஞ்சாயதன பூஜை செய்யும் முறை...!

    • இறை வழிபாட்டிற்கு, பக்திதான் பிரதானம்.
    • நீங்கள் எப்படி பூஜித்தாலும் பலன் ஒன்று தான்.

    * பஞ்சாயதன பூஜையை, காலை எழுந்தவுடன் குளித்து விட்டு பூஜை அறையில் அமர்ந்து செய்வது விசேஷம். இந்த பூஜை செய்யும் பொழுது வடக்கு திசை அல்லது கிழக்கு திசையை நோக்கி உட்கார்ந்து கொண்டு செய்வது சிறப்பானது. பஞ்சாயதன சிலைகளை கிழக்கு நோக்கி வைத்து நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்யலாம். அல்லது வடக்கு திசை நோக்கி பஞ்சாயதன சிலைகளை வைத்துவிட்டு, நாம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பூஜிக்கலாம்.

    * பூஜைக்கு வாசனை தைலம், பஞ்சகவ்யம், பஞ்சா மிர்தம், பசும்பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், அரைத்த சந்தனம், சுத்த ஜலம் ஆகியவை சிறப்பானவை. இவற்றில் நம்மால் எதைக் கொண்டு பூஜிக்க முடியுமோ, அதைக் கொண்டு பூஜை செய்யலாம்.

    'ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத் ஸ்ரியமிச்சேத் ஹுதாஸாத் ஈஸ்வராத் க்ஞானமன்விச்சேத் மோக்ஷமிச் சேஜ் ஜனார்தனாத்' என்ற ஒரு சுலோகத்தின்படி பஞ்சாயதன பூஜையில் சூரிய பகவானை பூஜிப்பதால் நல்ல ஆரோக்கியமும், சிவபெருமானை பூஜிப்பதால் நல்ல ஞானம் மற்றும் தெளிவான சிந்தனையும், மகாவிஷ் ணுவை போதிப்பதால் பட்டம், பதவி, புகழ், சத்ரு ஜெய மும், கணபதியை பூஜிப்பதால் தடைகள் விலகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அம்மனை பூஜிப்பதால் மங்கலம் உண்டாகும்.

    இந்த பூஜையை வழக்கமாக செய்யும் ஆண்கள் வெளியில் சென்று இருக்கும் பொழுதும், பெரியோர்கள் இல்லாத பொழுதும், பெண்களும் மேற்கொள்ளலாம்.

    * கிடைப்பதற்கு அரிய இந்த மானிட பிறவியில், வாய்ப்பைப் பயன்படுத்தி எளிய முறையில் இந்த பூஜையை செய்யலாம். சக்திக்கு ஏற்ற வகையில் பூஜை பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த வழிபாட்டிற்கு, பக்திதான் பிரதானம்.

    * பஞ்சாயதன பூஜையில் முக்கியமான விசேஷம் என்னவென்றால், ஒருவர் எந்த தெய்வத்தை பிரதானமாக கருதுகிறாரோ, அந்த தெய்வத்தை மையமாக வைத்தும், மற்ற தெய்வங்களை சுற்றி வைத்தும் பூஜிப்பார்கள். நடுநாயகமாக சிவபெருமானை வைத்து பூஜிப்பவர்கள், வடகிழக்கு திசையில் இருந்து வலமாக விஷ்ணு, சூரிய பகவான், கணபதி மற்றும் அம்பிகையை வைத்து பூஜிக்கலாம்.

    இதற்கு 'சிவ பஞ்சாயதன பூஜை' என்று பெயர். அம்பாளை பிரதானமாக வைத்து 'சக்தி பஞ்சாயதன பூஜை' செய்வார்கள். அம்பிகையை நடுவிலும், தென் மேற்கில் இருந்து வலமாக கணபதி, சூரியன், விஷ்ணு, சிவபெருமானை வைத்தும் பூஜை செய்வார்கள். மகா விஷ்ணுவை நடுவில் வைத்து பூஜிப்பவர்கள், தென் கிழக்கில் இருந்து வலமாக கணபதி, சூரியன், அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து 'விஷ்ணு பஞ்சாயதன பூஜை' செய்வார்கள்.

    விநாயகப் பெருமானை மையமாக வைத்து பூஜிப்பவர்கள், தென்கிழக்கில் இருந்து வலமாக விஷ்ணு, சூரியன். அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து செய்வது 'கணபதி பஞ்சாயதன பூஜை' ஆகும். சூரிய பகவானை பிரதானமாக வைத்து பூஜிப்பவர்கள், மையத்தில் சூரிய பகவானையும் தென்கிழக் கில் இருந்து வலமாக விஷ்ணு, கணபதி, அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து பூஜிப்பார்கள். இதற்கு 'சூரிய பஞ்சாயதன பூஜை' என்று பெயர். அவரவருக்கு விருப்பமான தெய்வங்களை பிரதானமாக வைத்து, ஐந்து விதமாக பூஜை செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி பூஜித்தாலும் பலன் ஒன்று தான்.

    பூஜையின் போது சொல்ல வேண்டிய சுலோகம்

    நம: சிவாய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே

    ஸநந்தினே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம:

    நம: சிவாப்யாம் நவ யௌவனாப்யாம்

    பரஸ்பராச் லிஷ்ட வபுர்தராப்யாம்

    நகேந்த்ர - கன்யா -வ்ருஷ - கேதனாப்யாம்

    நமோ நம: சங்கர - பார்வதீப்யாம்

    சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் சுரேஷம்

    விச்வாகாரம் ககன ஸத்ருசம் மேக வர்ணம் சுபாங்கம்

    லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகி ஹ்ருத்யான கம்யம்

    வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வலோகைக நாதம்

    ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே

    சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.

    இந்த சுலோகத்தைச் சொல்லி பூஜையை முடித்த பின்னர், ஐந்து முறை இறைவனை வணங்க வேண்டும்.

    Next Story
    ×