search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மனத்துயரை போக்கும் `தாகம்தீர்த்தபுரீஸ்வரர்
    X

    மனத்துயரை போக்கும் `தாகம்தீர்த்தபுரீஸ்வரர்'

    • வருந்தும் உள்ளங்களுக்கெல்லாம் மருந்தாய் வருபவர் மகேசர் ஒருவரே.
    • விருத்தாச்சலம் அடுத்த இறையூரில் உள்ள தாகம்தீர்த்தபுரீஸ்வரர் கோவில்.

    கோவில் தோற்றம்


    வருந்தும் உள்ளங்களுக்கெல்லாம் மருந்தாய் வருபவர் மகேசர் ஒருவரே. மன உளைச்சலால் வாடுபவர்கள், ஒரு நொடி ஈசனை நினைத்தால் போதும். அவர்களுக்கு சிறந்த உபாயம் கிடைத்திடும். அப்படி ஒரு சிவாலயம்தான், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த இறையூரில் உள்ள தாகம்தீர்த்தபுரீஸ்வரர் கோவில்.

    சமயக் குரவர்கள் நால்வருள் முதன்மையானவரான திருஞானசம்பந்தர், சிதம்பரம், எருக்கத்தம்புலியூர், விருதாச்சலம், பெண்ணாகடம் ஆகிய திருத்தலங்களைத் தொழுது வணங்கி, பாடல் பாடியிருந்தார்.

    இதன்பிறகு திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருவட்டத்துறை திருத்தலத்தை தரிசிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் கொண்டார்.

    வழக்கமாக தன் தந்தையார் சிவபாதஇருதயர் தோளில் அமர்ந்து திருத்தலங்களை தரிசிக்கச் செல்லும் ஐந்து வயதே ஆன திருஞானசம்பந்தர், திருவட்டத்துறை அரத்துறைநாதரை தரிசிக்க, சூரியன் கடுமையான வெப்பத்தைப் பொழியும் கோடை காலத்தில், அடியார் கூட்டத்தோடு நடந்தே சென்றார்.

    நெடுந்தூரம் நடந்து வந்த காரணத்தால், குழந்தையான திருஞானசம்பந்தர் மிகவும் களைப்படைந்தார். இரவு நேரம் ஆனதால் இறையூர் என்னும் இந்த திருத்தலமான மாறன்பாடியில் தங்கினார். அவரோடு சிவனடியார்கள் பலரும் அங்கே தங்கினர்.

    அப்போது பெருங்கருணைக்கு சொந்தக்காரரான சிவபெருமான், அந்த பகுதியில் ஒரு நீரூற்றை உருவாக்கி, திருஞானசம்பந்தரின் தாகத்தையும், அவரோடு வந்திருந்த அடியார்களின் தாகத்தையும் தீர்த்தார்.

    அன்பிற்கினிய அன்னையான, அன்னபூரணியோ தனது செல்லப்பிள்ளைக்கு அன்னமிட்டு பசி நீக்கினாள். அடியார்களுக்கும் உணவளித்து, அவர்களின் அரும்பசியையும் போக்கினாள். தாகம் தீர்ந்து, பசியாறிய அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

    அப்போது திருஞானசம்பந்தரின் கனவில் தோன்றிய சிவபெருமான், அவரை திருவரத்துறைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதோடு, முத்து (பல்லக்கு) சிவிகையும், முத்துக்குடையும், முத்துச்சின்னமும் அந்தணர்கள் மூலம் அளித்தருள்வதாக கூறி மறைந்தார்.

    பொழுதும் விடிந்தது. கண் விழித்தார் திருஞானசம்பந்தர். திருவரத்துறையில் இருந்து முத்துச்சிவிகை (பல்லக்கு), முத்துக்குடை மற்றும் ரிஷப முத்திரை பதித்த முத்துச்சின்னம் ஆகியவற்றை அந்தணர்கள் மூலம் அனுப்பிவைத்தார் அரத்துறைநாதர்.

    இதைக்கண்டு திருஞானசம்பந்தருடன் இருந்த அடியார்கள் அனைவரும் அகம் மகிழ்ந்தனர். குளிர்ச்சியான கடல் முத்துக்கள் பதித்த முத்துக் குடையை கையில் ஏந்திய திருஞான சம்பந்தர், முத்துப் பல்லக்கில் ஏறி அமர்ந்தார். அடியவர்கள் முத்துச் சின்னம் ஏந்தியபடி சம்பந்தரை சுமந்தபடி, சிவகோஷத்துடன் அரத்துறை நோக்கி புறப்பட்டனர்.

    முருகப்பெருமானைப் பற்றி பல்வேறு பாடல்கள் இயற்றிய அருணகிரிநாதர், கந்தக்கடவுளே மீண்டும் சம்பந்தராய் அவதரித்ததாக பல பாடல்களில் எடுத்துரைத்துள்ளார். அப்படிப்பட்ட திருஞானசம்பந்தருக்கு, சீர்காழியில் அன்னை பார்வதி பாலூட்டினாள்.


    ஈசனோ, அந்த பிஞ்சுக் குழந்தையின் பாதம் நோகாமல் இருக்க இறையூர் தலத்தில் முத்துக்களால் ஆன பொருட்களை அளித்து அருள்புரிந்தார்.

    நடு நாட்டின் பாடல் பெற்ற தலமான பெண்ணாகடத்திற்கும், திருவட்டத்துறைக்கும் இடையே அமைந்துள்ளது, இந்த இறையூர் திருத்தலம். இந்த ஊரை பெரிய புராணத்தில் சேக்கிழார், 'மாறன்பாடி' என்று குறிப்பிடுகிறார்.

    திருஞானசம்பந்தர் வைப்புத் தலமாக பாடிய நான்கு 'பாடி'களில் ஒன்றாக திகழ்கிறது இறையூர் (மாறன்பாடி) திருத்தலம். எதிர்கொள்பாடி, திருமழப்பாடி, திருவாய்ப்பாடி ஆகியவை மற்ற மூன்று தலங்களாகும். இறையூர் திருத்தலமானது, வெள்ளாறு எனப்படும் நீவாநதியின் வடகரையில் அமைந்துள்ளது.

    ஆலய அமைப்பு

    கிழக்கு நோக்கிய இந்த ஆலயம் தோரண வாயிலுடன் அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே கணபதி தனிச்சன்னிதி கொண்டுள்ளார். விதானத்தின் மேலே, சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை மற்றும் முத்துச்சின்னம் ஆகியவற்றை சிவபெருமான் அருளிய சுதைச் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. எதிரே திருஞானசம்பந்தர் தனிச் சன்னிதியில் கையில் பொற்றாளத்துடன் கற்சிலையாக காட்சி தருகிறார்.

    ஆலயத்தின் உள்ளே சென்றால் நேராக நந்தி, பலிபீடம் உள்ளன. அதைக் கடந்து மகா மண்டபம், அர்த்த மண்டபம் இருக்கின்றன. அடுத்ததாக அமைந்த கருவறையில், கருணைக் கடலான தாகம்தீர்த்தபுரீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையாரின் நடுவே பச்சைக் கல்லால் ஆன லிங்கத் திருமேனியராக காட்சி தருகிறார்.

    இவரை மனமுருக வழிபட்ட பின்னர், மீண்டும் மகா மண்டபம் வந்தால், அங்கே தென்புறமாக அன்னபூரணி அம்மன் வீற்றிருக்கிறார். நான்கு கரங்களைக் கொண்ட இந்த அன்னை, தன் மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் ஏந்தியும், கீழ் இரு கரங்களை அபய- வரத ஹஸ்த முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறார்.


    ஒற்றை சுற்றுடைய சிறிய ஆலயமான இங்கே, தென்மேற்கில் கணபதி, மேற்கில் வள்ளி- தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சன்னிதிகள் உள்ளன. திருமாலுக்கும், வாயு பாகத்தில் கஜலட்சுமிக்கும் சன்னிதி இருக்கிறது.

    தென் சுற்றில் நால்வர்களை தரிசிக்கலாம். ஈசான திசையில் நவக்கிரகங்கள், சனி பகவான், பைரவர் வீற்றிருக்கிறார்கள். தல விருட்சமாக பலா மரம் உள்ளது. தல தீர்த்தமாக ஆலயத்தின் எதிரே, சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட தான்தோன்றி தீர்த்தம் காணப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் அன்று, சம்பந்தருக்கு முத்துக்களால் ஆன பொருட்களை வழங்கி, அவருக்கு அபிஷேக- அலங்காரம் செய்து, பல்லக்கில் வைத்து திருவரத்துறைக்கு செல்லும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

    அன்றைய தினம் சிவனடியார்களுக்கு அன்னதானம் வெகு விமரிசையாக நடந் தேறும். இத்தல இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புதிய ஆடைகள் சாத்தி, வாசனை மலர்களாலும், வில்வத்தாலும் அர்ச்சனை செய்தால், மனத்துயரம் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி குடியேறும்.

    இந்த ஆலயமானது, தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் சாலையில் சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இறையூர் திருத்தலம். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநத்தத்தில் இருந்து சுமார் 23 கிலோமீட்டரில் விருத்தாச்சலம் செல்லும் சாலையில் இவ்வூர் இருக்கிறது.

    Next Story
    ×