search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முருகப்பெருமானின் அற்புதங்கள்
    X

    முருகப்பெருமானின் அற்புதங்கள்

    • சென்னைமலை முருகன் இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன்.
    • கையில் வில், அம்படன் இருக்கும் தனுசு சுப்பிரமணியராக முருகன்.

    * சனி பகவானுக்குரிய பரிகாரத்தலமாக விளங்கும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.

    * இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தரும் தலம் ஈரோடு - சென்னிமலை. இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும்.

    * வழக்கமாக அம்மனுக்கு தான் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் முருகன் தலைக்குமேல் ஐந்து தலை நாகர் குடைபிடித்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.

    * கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.

    * திருவையாறு ஐயாரப்பர் சன்னிதி பிரகாரத்தில் கையில் வில், அம்படன் இருக்கும் தனுசு சுப்பிரமணியராக முருகன் அருள் செய்கிறார்.

    * திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப் பெருமான். இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்து, இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் எந்தியபடி போருக்கு தயாராகும் கோலத்தில் காட்சி தருகிறார்.

    * நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருவது தனிச் சிறப்பாகும். இந்த முருகனின் சிலையில் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாகும்.

    * மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் தலத்தில் முருகன், கையில் தண்டம் ஏந்திய கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாகும்.

    * மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி பாலமுருகனாக முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

    * திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகப்பெருமான் மூன்று கண்களுடனும், எட்டு திருக்கரங்களுடனும் காட்சி தருகிறார்.

    * புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணனூர் திருத்தலத்தில் பழமையான கோவிலில் முருகன். ஒரு கையில் ஜபமாலையுடனும், மறுகையில் சின் முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

    * முருகன் பாம்பு வடிவில் காட்சி தரும் ஒரே திருத்தலம் 'காட்டி சுப்பிரமணியா' கோவிலாகும். கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமண்யா கோவிலில் இந்த முருகனை தரிசிக்கலாம். இந்த பகுதியில் பாம்புகள் யாரையும் தீண்டுவதுமில்லை. பாம்பை யாரும் துன்புறுத்துவதும் இல்லை.

    * கனககிரி தலத்தில் முருகப்பெருமான் கையில் கிளியை ஏந்தி காட்சி தருகிறார்.

    * செம்பனார்கோவில் திருத்தலத்தில் முருகப்பெருமான் ஜடாமகுடம் தாங்கி, இரண்டு கைகளிலும் அக்கமாலை ஏந்தி, தவக்கோலத்தில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

    * மாமன் திருமாலைப்போல் முருகப்பெருமானும் கையில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் கோவில் கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.

    * பூம்புகார் அருகே உள்ள மேலையூரில் திருச்சாய்க்காடு சாயாவனேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் வில், அம்புடன் பஞ்சலோக சிலை வடிவில் காட்சி தருகிறார்.

    * ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை என்னும் இடத்தில் உள்ள முருகன் கோவிலில் விக்ரஹம் கிடையாது. ஏழு அடி உயர வேல் மட்டுமே காட்சி தருகிறது. வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயம் இது.

    * பெரம்பலூர் அருகில் உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன் கரும்போடு காட்சி தருகிறார்.

    * நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி என்ற தலத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

    * திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள வில்வாரணி என்னும் ஊரில் அமைந்துள்ள நட்சத்திர கிரி மலையில் சுயம்பு வடிவ லிங்க திருமேனியாக, நாகாபரணத்துடன் முருகன் காட்சி தருகிறார். முருகனும், சிவனும் ஒரே வடிவமாக அமைந்திருக்கும் கோலத்தை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

    * சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் ஆடும், வலப்புறம் மயிலும் எதிரெதிரே இருக்கும் வகையில் காட்சி தருகிறார்.

    * ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் தலத்தில் உள்ள நட்டாற்றிஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் கோலத்தில் முரு கன் காட்சி தருகிறார்.

    *நாகப்பட்டினம் மாவட்டம் திருவிடைச்சுழி என்னும் ஊரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமான் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். முருகனுக்கும். தெய்வானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்த தலமாக இது கருதப்படுகிறது.

    * நாகப்பட்டினம் மாவட்டம் பொரவாச்சேரி கந்தசாமி கோவிலில் உள்ள மூலவர் கந்தசாமி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டதாகும். மயில் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் முருகனின் திருமேனி. மயில், திருவாசி உட்பட மொத்த எடையையும் மயிலின் கால்கள் தாங்கிநிற்பது அதிசயமான காட்சியாகும்.

    Next Story
    ×