என் மலர்
வழிபாடு
நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவிலில் விடையாற்றி விழா
- அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
- பல்வேறு வகைகளில் தயாரான உணவுகள், பழங்கள் படையலிடப்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கென்று தனி சன்னதி கிடையாது.ஆண்டு முழுவதும் அகல் விளக்கு தீபமாய் காட்சி தரும் அம்மனுக்கு வைகாசி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு விழா கடந்த மே மாதம் 26-ந் தேதி இரவு சமயபுரத்தில் இருந்து அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.
தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக பெரிய திருவிழா நடந்தது. இதையொட்டி நாச்சியார் கோவில் முக்கிய வீதிகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டமாக நிரம்பி வழிந்தது. போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து தொட்டில் கட்டியும், பாடை காவடி எடுத்தும், அழகு காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் இறுதி நிகழ்ச்சியாக விடையாற்றி விழா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. பல்வேறு வகைகளில் தயாரான உணவுகள், பழங்கள் ஆகியவற்றை படையலிடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன் அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு ஆகியோர் செய்திருந்தனர்.