search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நலம் தரும் நவ துர்க்கை
    X

    நலம் தரும் நவ துர்க்கை

    • துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக வேதங்கள் சொல்கின்றன.
    • ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் முதல் நாளில் இந்த துர்க்கையை வழிபடுவார்கள்.

    பார்வதிதேவியின் அம்சமாக பார்க்கப்படுபவள், துர்க்கை தேவி. வட மாநிலத்தில் துர்க்கை வழிபாடு மிகவும் பிரசித்திப்பெற்றது. தென்னிந்தியாவிலும் பெரும்பாலான சிவாலயங்கள் மற்றும் அம்பாள் கோவில்களில் துர்க்கையை தரிசிக்க முடியும். இந்த துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக வேதங்கள் சொல்கின்றன. அவை:- சைலபுத்திரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, காளராத்திரி, மகாகவுரி, சித்திதாத்ரி. இவர்கள் ஒன்பது பேரும் 'நவ துர்க்கை' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களைப் பற்றிய தகவல்களை சிறிய குறிப்புகளாக பார்ப்போம்.

    சைலபுத்திரி

    நவ துர்க்கைகளில் முதன்மையானவள், சைலபுத்திரி. 'மலைமகள்' என்பது இதன் பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் முதல் நாளில் இந்த துர்க்கையை வழிபடுவார்கள். யோகிகள் அனைவரும், தங்களுடைய யோக சாதனைகள் கைகூடி வர இந்த துர்க்கையைத்தான் வழிபடுவார்கள். இந்த அன்னையின் வாகனம் - நந்தி, ஆயுதம்- சூலம்.

    பிரம்மச்சாரிணி

    'பிரம்ம' என்பதற்கு 'தபசு' என்று பொருள். 'பிரம்மச்சாரிணி' என்பதற்கு 'தவம் இயற்றுபவள்' என பொருள் கொள்ளலாம்.

    இந்த துர்க்கையை நவராத்திரியின் இரண்டாவது நாளில் வழிபடுவார்கள். வலது கரத்தில் கமண்டலமும், தண்டமும் தாங்கி எளிமையாக காட்சி தரும் இந்த அன்னைக்கு, வாகனம் இல்லை. இவள், சிவபெருமானை மணம்புரியும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்ததாக வரலாறு சொல்கிறது. இந்த அன்னை, ஞான வடிவானவள். தன்னை வழிபடுபவர்களுக்கு பொறுமையைத் தருபவள்.

    சந்திரகாண்டா

    துர்க்கையின் மூன்றாவது வடிவம் இது. 'காண்டா' என்பதற்கு 'மணி' என்று பொருள்.

    தன்னுடைய முன் நெற்றியில், மணி போல சந்திரனை சூடியிருப்பதால் இந்த துர்க்கைக்கு 'சந்திரகாண்டா' என்று பெயர். இந்த அன்னைக்கு, சிவபெருமானைப் போல மூன்று கண்கள், 10 கரங்கள் உண்டு. வாகனம்- சிங்கம். போருக்கு தயாரான கோலத்தில் இந்த துர்க்கை காணப்படுகிறாள். நவராத்திரியின் மூன்றாம் நாளில் இந்த துர்க்கையை வணங்குவார்கள்.

    கூஷ்மாண்டா

    நவராத்திரியின் நான்காம் நாளில் வழி படப்படும் துர்க்கை, 'கூஷ்மாண்டா.' 'கூ' என்பது 'சிறிய' என்றும், 'உஷ்மா' என்பது 'வெப்பம்' என்றும், 'ஆண்டா' என்பது 'உருண்டை' என்றும் பொருள்படும்.

    வெப்பமயமான சிறிய உருண்டையான இந்த உலகை படைத்தவள் என்று பொருள்படும் வகையில் 'கூஷ்மாண்டா' என்று இந்த துர்க்கை அழைக்கப்படு கிறாள். எட்டுக் கரங்களைக் கொண்ட இந்த அன்னைதான், சூரிய மண்டலத்தை இயக்குவதாக சொல்லப்படுகிறது. எட்டுக் கரங்களிலும் ஆயுதங்கள் தாங்கி இருக்கிறாள். அன்னையின் வாகனம்- சிங்கம்.

    காளராத்திரி

    நவராத்திரியின் 7-ம் நாள் வழிபாட்டுக்குரியவள், 'காளராத்திரி' தேவி. இந்த துர்க்கையின் வடிவம்தான், நவ துர்க்கைகளிலேயே உக்கிரமானது என்கிறார்கள்.

    'காள' என்பதற்கு 'நேரம்' என்றும், 'மரணம்' என்றும் பொருள். 'ராத்திரி' என்பது இரவைக் குறிக்கும். 'காளராத்திரி' என்பதற்கு 'காலத்தின் முடிவு' என்று பொருள் கூறுகிறார்கள். இந்த துர்க்கையின் வடிவம், எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. கருமை நிற மேனியைக் கொண்ட இந்த துர்க்கை நான்கு கரங்களைக் கொண்டவள். இரண்டு கரங்களில் வஜ்ராயுதம், வாள் ஏந்தியும், மற்ற இருகரங்களில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியும் காட்சி தருகிறாள். கழுதையை வாகனமாகக் கொண்டவள்.

    ஸ்கந்த மாதா

    'ஸ்கந்த' என்பது முருகப்பெருமானைக் குறிக்கும். முருகனுக்கு தாய் என்பதால் இந்த அன்னைக்கு 'ஸ்கந்தமாதா' என்று பெயர்.

    நவராத்திரி விழாவில் 5-வது நாளில் வணங்கப்படும் தெய்வம் இவள். நான்கு கரங்களைக் கொண்ட இந்த துர்க்கை, இரண்டு கரங்களில் தாமரை மலரைத் தாங்கி தவம் செய்பவளாக காட்சி தருகிறாள். இதனால் இந்த தேவியை 'பத்மாசினி' என்றும் அழைக்கிறார்கள். மன அமைதியைத் தருபவளாக இந்த அன்னை சித்தரிக்கப்படுகிறாள்.

    காத்யாயனி

    முன்னொரு காலத்தில் 'காதா' என்ற முனிவர், தவம் இருந்து அன்னையை தன்னுடைய மகளாகப் பெற்றார். இதனால் இவளுக்கு 'காத்யாயனி' என்ற பெயர் வந்தது.

    இத்தேவியை 'மகிஷாசூரமர்த்தினி' என்றும் கூறுகிறார்கள். தீய சக்திகளை வேரோடு அழிக்கும் இந்த அன்னை, நவராத்திரியின் 6-ம் நாளில் வணங்கப்படுகிறாள். நான்கு கரங்களில் ஒரு கரத்தில் தாமரையும், மறு கரத்தில் வாளும் தாங்கியிருக்கிறாள். மற்ற இருகரங்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வகையில் உள்ளன.

    மகாகவுரி

    'மகா' என்பதற்கு 'பெரிய' என்றும், 'கவுரி' என்பதற்கு 'தூய்மையானவள்' என்றும் பொருள்.

    இந்த துர்க்கை, மிகுந்த வெண்மை நிறத்துடன் காணப்படுவதால் 'மகா கவுரி' என்று அழைக்கப்படுகிறாள். நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவி, ஒரு கரத்தில் சூலமும், மறு கரத்தில் மணியும் தாங்கியிருக்கிறாள். மற்ற இரு கரங்களும் பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றன. இந்த துர்க்கையின் வாகனம்- வெள்ளை நிற காளை.

    சித்திதாத்ரி

    நவராத்திரியின் இறுதிநாளில் இந்த அன்னையை ஆராதனை செய்வார்கள். 'சித்தி' என்பது 'சக்தி'யைக் குறிக்கும். 'தாத்ரி' என்பதற்கு 'தருபவள்' என்று பொருள்.

    அஷ்டசித்திகளை அருள்பவள் என்பதால், அன்னைக்கு இந்தப் பெயர் வந்தது. தாமரை மலரில் அமர்ந்து இருக்கும் இந்த தேவி, நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். கதை, சக்கரம், தாமரை, சங்கு ஏந்தியிருக் கிறாள். சிங்கத்தை வாகனமாகக் கொண்டவள். இந்த அன்னையை வழிபடுபவர்கள், வாழ்வில் பேரானந்தத்தை அடைவர்.

    Next Story
    ×