search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நலம் தரும் நவ திருப்பதி
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நலம் தரும் நவ திருப்பதி

    • வைணவத் தலங்கள் தற்போது பக்தர்களிடம் அமோக ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
    • அந்த 9 ஆலயங்களும் தென்தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளன.

    வைணவத்தலங்களில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற சிறப்புப் பெற்ற தலங்கள் 108. இந்த 108 தலங்களையும் திவ்யதேச தலங்களாக பக்தர்கள் போற்றுகிறார்கள். இந்த 108 தலங்களிலும் ஆழ்வார்கள் ஏராளமான பாசுரங்கள் பாடி உள்ளனர். இன்றும் அந்த பாடல்கள் ஒவ்வொரு தலத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 108 திவ்யதேசங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு தனிச்சிறப்பைக் கொண்டுள்ளன. புராண வரலாற்றுடன் அவை கொண்டுள்ள தொடர்பு, நமக்கு ஏராளமான தகவல்களை தந்த வண்ணம் உள்ளன. அவற்றை முழுமையாக உணர்ந்து புரிந்து கொள்ள, இந்த ஒரு பிறவி போதாது என்றுதான் சொல்ல வேண்டும்.

    108 வைணவத் தலங்களில் சில சமீப காலமாக மக்களால் மிகவும் விரும்பி தரிசிக்கப்படுகின்றன. அதற்கு முக்கியக் காரணம், அந்த தலங்களில் வழிபட்டால் தோஷங்கள் விலகுவதுடன், செல்வம் குவிந்து, குடும்பத்தில் அமைதி ஏற்பட்டு குதூகலம் ஏற்படுவதுதான்.

    அந்த வகையில் "நவதிருப்பதி" என்றழைக்கப்படும். வைணவத் தலங்கள் தற்போது பக்தர்களிடம் அமோக ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த 9 ஆலயங்களும் தென்தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளன. அங்குள்ள ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, சுற்றுப்பகுதிகளில் அருகருகே உள்ள ஊர்களில் நவதிருப்பதி கோவில்கள் உள்ளன. மண்வாசனை மிக்க அழகிய கிராமங்களில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த 9 கோவில்கள் இன்றும் கம்பீரமாக திகழ்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

    நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ள ஊர்கள் வருமாறு:-

    1. ஸ்ரீவைகுண்டம், 2. நத்தம், 3.திருக்கோளூர், 4. திருப்புளியங்குடி, 5. ஆழ்வார்திருநகரி, 6. தென் திருப்பேரை, 7. பெருங்குளம், 8. தொலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி தேவப்பிரான் கோவில்), 9. தொலை வில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி அரவிந்த லோசனர் ஆலயம்)

    நவதிருப்பதிகள் ஒன்பதும் தஞ்சை மண்டலத்தில் உள்ள 9 நவக்கிரக தலங்களுடன் தொடர்புடையவை என்று கருதப்படுகிறது. நவதிருப்பதியில் ஒவ்வொரு தலத்தில் உள்ள பெருமாளும் ஒவ்வொரு கிரகத்துக்குரிய அம்சமாக கருதப்படுகிறார்.

    நமது முன்னோர்கள் இந்த அடிப்படையில் தான் நவதிருப்பதியில் நவக்கிரக வழிபாட்டை உருவாக்கி இருந்தனர். ஆனால் வைணவத் தத்துவங்களில், வழிபாட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நவ திருப்பதி தலங்களில் நவ கிரகங்களை தொடர்புபடுத்தி வழிபடுவது நின்று நாளடைவில் மறைந்து போனது.

    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நவதிருப்பதி ஆலயங்கள் தொடர்பாக பிரசன்னம் பார்க்கப்பட்ட போது நவதிருப்பதிக்கும் நவ கிரகங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 9 கிரகங்களுக்கும் உரிய நவதிருப்பதிகள் வரையறுக்கப்பட்டன. அன்று முதல் நவதிருப்பதி தலங்களில் நவ கிரகங்களை தொடர்புபடுத்தி வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் விபரம் வருமாறு:-

    1. ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் கோவில் - சூரியன்

    2. நத்தம் அருள்மிகு கள்ளபிரான் கோவில் - சந்திரன்

    3. திருக்கோளுர் அருள்மிகு வைத்தமாநிதி கோவில் - செவ்வாய்

    4. திருப்புளியங்குடி அருள் மிகு கள்ளபிரான் கோவில் -புதன்

    5.ஆழ்வார்திரு நகரி ஆதி நாதர் ஆழ்வார்கோவில் -குரு

    6. குரு தென் திருப்பேரை அருள்மிகு மகர நெடுங்குழை நாதர் கோவில் - சுக்ரன்

    7. பெருங்குளம் அருள்மிகு கள்ளபிரான் சாமி கோவில் - சனி

    8. தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி) அருள் மிகு தேவர்பிரான் ஆலயம் - ராகு

    9. இரட்டை திருப்பதி அரவிந்த லோசனர் ஆலயம் -கேது

    சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

    அதுமட்டுமின்றி செல்வம் குவியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். இன்றே நவ திருப்பதிக்கு புறப்படுங்கள்.

    Next Story
    ×