search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பங்குனி உத்திர விழா: வடபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    பங்குனி உத்திர விழா: வடபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    போரூர்:

    பிரசித்தி பெற்ற வட பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தினசரி காலை மற்றும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன்கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இன்று இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 27-ந்தேதி வரை 3 நாட்களும் இரவு 7 மணிக்கு திருக்குளத்தில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

    பாரிமுனை, ராசப்பா செட்டி தெருவில் உள்ள கந்தக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.

    மேலும் 3 பெருமாளும் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தை சென்றடைந்தனர். மற்ற கோவில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து இருந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

    Next Story
    ×