search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிள்ளையார்பட்டியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
    X

    பிள்ளையார்பட்டியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

    • சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அவ்வப்போது தீர்த்தமும் தலையில் தெளிக்கப்பட்டது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் உலக மக்கள், நோயின்றி ஆரோக்கியமாக வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும் 1008 கலசாபிஷேக விழா கடந்த 13-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து சாந்தி ஹோமம், திரச ஹோமம், ப்ரவேசபலி, ரசோக்ன ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் யாகசாலை மண்டபத்தில் 1008 கலசாபிஷேகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு விழா தீர்த்தஸங்க்ரஹணம், மிருத்சங்கிரஹரணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனமும், முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி 6-வது கால யாகபூஜைகள் வரை நடைபெற்றது.

    பூர்ணாகுதி, சதுர்லெக்ச ஜெபதசாம்ச ஹோமங்களும், 6-வது கால மஹாபூர்ணாகுதி தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து 12.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படும் நிகழ்ச்சி தலைமை பிச்சைக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகள் ஒலித்தபடி கோவில் வடக்கு கோபுரம் நுழைவு வாயில் வழியாக சென்று மூலவருக்கு அபிஷேகம் தொடங்கியது.

    பின்னர் பிரகாரங்களில் உள்ள மற்ற தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் உற்சவர் கற்பகவிநாயகர், சண்டிகேசுவரர், அங்குச தேவருக்கும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 12.40 மணிக்கு தொடங்கிய அபிஷேகம் 3 மணி வரை நடைபெற்றது. சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அவ்வப்போது தீர்த்தமும் தலையில் தெளிக்கப்பட்டது.

    இந்த விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தர்மபுரம் மற்றும் துளாவூர் ஆதினம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள், கண்டனூர் கருப்பஞ் செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×