search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உடலை சுட்டெரித்த சந்தனம்- ஆன்மிக கதை
    X

    உடலை சுட்டெரித்த சந்தனம்- ஆன்மிக கதை

    • ஒரு ஊரில் இருந்த மிகப்பெரிய பணக்காரர், தன்னுடைய குடும்ப நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார்.
    • சூரிய பகவானை பிரார்த்தித்து தலைமை வேதியரின் உடல் வெப்பத்தை தணிக்கும்படி வேண்டினார்.

    ஒரு ஊரில் இருந்த மிகப்பெரிய பணக்காரர், தன்னுடைய குடும்ப நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்தை நடத்த அந்தப் பகுதியில் இருந்த வேதியர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். யாகத்தை தலைமையேற்று நடத்தவும் ஒரு வேதியர் நியமிக்கப்பட்டிருந்தார். யாகம் தொடங்கும் நாள் அன்று, அந்த தலைமை வேதியர் பட்டாடை உடுத்தி, ஏராளமான தங்க நகைகள் அணிந்து, கைகளில் வைர மோதிரங்கள் பளபளக்க ராஜ தோரணையோடு யாக குண்டம் முன்பாக வந்து அமர்ந்தார்.

    அங்கு வந்திருந்த மற்ற வேதியர்களும் கூட அவர்களின் வசதிக்கேற்ப ஒரு தரமான நல்ல துணியை உடுத்தி வந்திருந்தனர். அவர்களில் ஒரு வேதியர் மட்டும், கந்தலான கீழாடையை அணிந்து வந்திருந்தார். அவரைப் பார்த்ததும், முகம் சுழித்தார் தலைமை வேதியர். யாக குண்டத்தின் முன்பாக வந்து அமர்ந்த அந்த ஏழ்மையான வேதியரை, "நீயெல்லாம் இங்கே அமர வேண்டாம். ஒரு ஓரமாக அமர்ந்து சந்தனம் அரைத்துக் கொடுத்தால் போதும்" என்று கடிந்து கொண்டார், தலைமை வேதியர்.

    அவரது சொல்லை தட்ட விரும்பாக ஏழை வேதியர், ஒரு ஓரமாக அமர்ந்து கல்லில் சந்தனத்தை அரைக்கத் தொடங்கினார். அப்போது அவரது வாய் சூரிய தேவனுக்குரிய மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்தது. யாகம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அந்த ஏழை வேதியரை பார்த்த தலைமை வேதியருக்கு எரிச்சல் உண்டானது.

    'நாம் வேதம் ஓத வேண்டாம். சந்தனம் அரைத்தால் போதும் என்று சொன்னதால், இந்த வேதியன் நம்மை திட்டிக்கொண்டே இருக்கிறானே' என்று தலைமை வேதியர் நினைத்தார். யாகம் நிறைவடைந்ததும் அங்கு வந்திருந்த அனைவருக்கும் சந்தனம் வழங்குவார்கள். அதனை ஆண்கள் அனைவரும் தங்கள் உடலில் பூசிக்கொள்ள வேண்டும். அந்த சந்தனத்தை முதலில் வாங்க வேண்டியவர், தலைமை வேதியர்தான்.

    அதன்படி சந்தனத்தை வாங்கிய தலைமை வேதியர், அதனை தன்னுடைய உடல் முழுவதும் பூசினார். மறுநொடியே, "ஐயோ.. அம்மா.. எரிகிறதே.. எரிகிறதே.." என்று சத்தம் போட்டார். அங்கும் இங்கும் ஓடினார். உடலை குளிரச் செய்யும் சந்தனத்தைப் பூசியதும் தலைமை வேதியர் இப்படி சொன்னது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. தலைமை வேதியரும் கூட அதிர்ச்சியாகிப் போனார்.

    'ஏழை வேதியன்தான் ஏதோ செய்து விட்டான் போல' என்று நினைத்த தலைமை வேதியர், "சந்தனம் ஏன் சுடுகிறது?" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த ஏழை வேதியர், "நான் சூரிய பகவானின் மந்திரத்தை உச்சரித்தபடியே சந்தனம் அரைத்தேன். சூரிய பகவான் தன் வெப்பத்தை இதில் கொட்டி விட்டார் போலும்" என்றார்.

    பின்னர் சூரிய பகவானை பிரார்த்தித்து தலைமை வேதியரின் உடல் வெப்பத்தை தணிக்கும்படி வேண்டினார். அடுத்த நொடியே, தீப்பற்றி எரிவதுபோல் இருந்த உடல், குளிர்ச்சியாக மாறியது. அதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த தலைமை வேதியர், "நீர் எல்லோரை விடவும் உயர்ந்தவர். உம்மை அவமதித்து விட்டேனே" என்று வருந்தினார். சூரியனே கட்டுப்பட்டு போய் இருந்த அந்த சக்தி வாய்ந்த ஏழை வேதியர் வேறு யாருமல்ல. பின்காலத்தில் மிகப்பெரிய மகானாக உருவெடுத்து, தற்போது பலராலும் வணங்கப்படும் ஸ்ரீராகவேந்திரர்.

    Next Story
    ×