search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கிருஷ்ண ஜெயந்தி பற்றிய அரிய தகவல்கள்
    X

    கிருஷ்ண ஜெயந்தி பற்றிய அரிய தகவல்கள்

    • இன்று ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் பாராயணம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
    • கிருஷ்ணா என்றால் காந்தம் போன்று ஈர்ப்பவன் அல்லது வசீகரிப்பவன் என்று பொருள்

    திரிபங்கி தோற்றம்

    கண்ணனின் நிற்கும் தோற்றத்தில் மூன்று வளைவுகளைத் தரிசிக்கலாம். இதற்கு 'திரிபங்கி' என்று பெயர். ஒரு திருவடியை நேரே வைத்து, மறு திருவடியை மாற்றி வைத்திருப்பது ஓர் வளைவு! இடுப்பை வளைத்து நிற்பது மற்றொன்று! கழுத்தைச் சாய்த்து கோவிந்தன் குழல் கொண்டு ஊதுவது மூன்றாவது வளைவு! இப்படி நிற்பதனால் கிருஷ்ணனை 'திரிபங்கி லலிதாகாரன்' என்று வடமொழித் தோத்திரங்கள் போற்றுகின்றன. இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தைக் குறிக்கின்றன.

    சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மை

    கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

    வசீகரிப்பவன்

    கிருஷ்ணா என்றால் காந்தம் போன்று ஈர்ப்பவன் அல்லது வசீகரிப்பவன் என்று பொருள். வாசுதேவன் என்றால் நிலைப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலை கொண்டவன் என்று பொருள். படைத்தல், காத் தல், அழித்தல் இவற்றில் எந்த தெய் வம் காத்தலை செயல் படுத்து கின்றதோ அதுவே வாசுதேவன்..

    16 ஆயிரம் மனைவிகள்

    கிருஷ்ணனின் பட்டத்து ராணி ருக்மணிதான் மற்ற ஏழு முக்கிய ராணிகள் சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, சத்டயா, பத்ரா மற்றும் லட்சுமணா.

    இந்த 8 ராணிகளும் 8 பகுதிகளை கொண்ட பிரக்ருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகம் ஆகியவையே பிரக்ருதியின் 8 பகுதிகள். இதன் உள்ளர்த்தம், 8 பகுதிகளும் கிருஷ்ணனுக்கு அடங்கியவை என்பது. கிருஷ்ணன், நரகாசூரனை வென்று 16,000 இளவரசிகளை மீட்டு அவர்களுக்கு சமுதாய அந்தஸ்து கொடுக்க அவர்களை திருமணம் செய்து கொண்டான். அந்த 16,000 இளவரசிகள் நம் உடலில் உள்ள 16,000 நாடி நரம்புகளைக் குறிக்கின்றனர்.

    கண்ணனுக்கு சனிக்கிழமை

    கிரகங்களில் சனீஸ்வரனுக்குரியது சனிக்கிழமை. அந்த தினம் கண்ணனை வணங்குவதற்கும் உரிய நாளாக கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டவையே. எனவே, கண்ணனை வணங்கினால் எந்த கிரகமும் துன்பம் தராது.

    உயரமான வழுக்கு மரம்!

    தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணர் கோவில், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில் தான். இங்குள்ள வழுக்கு மரக்கம்பத்தின் உயரம் 30 அடி. ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக, இரண்டு வாரங்களுக்கு முன் சோற்றுக் கற்றாழையுடன் விளக்கெண்ணை கலந்து இந்த வழுக்கு மரத்தில் பூசி, கோவில் வாசலில் நடுவார்கள். இந்த வழுக்கு மரத்தில் ஏறி பண முடிப்பு பெறுவதை இந்த பகுதி மக்கள் கவுரவமாக கருதுகின்றனர். கொரோனா காரணமாக இந்த ஆண்டு வழுக்கு மரம் வைபவம் தடைபட்டுள்ளது.

    சீடை, முறுக்கு ஏன்?

    பல்கூட முளைக்காத பாலகிருஷ்ணனுக்கு கடிக்கக் கடினமாக உள்ள சீடை, முறுக்குகளை நிவேதனம் செய்வதில் ஆழ்ந்த உட்பொருள் உண்டு. குழந்தையாக இருந்தபோதே பூதனை, சகடாசுரன், தேனுகாசுரன் போன்ற பல அசுரர்களைக் கொன்று உய்வித்தவன் கிருஷ்ணன். அப்படிப்பட்ட விசேஷ ஆற்றல் உடைய குழந்தை என்பதாலேயே, அவன் பிறந்த நாளில் சீடை, முறுக்கு போன்றவற்றை நிவேதனம் செய்கின்றோம்.

    கண்ணனின் ஆபரணங்கள்

    பெருமாள் சிலையை 'திவ்ய மங்கள விக்ரகம்' என்பர். அவரது திருமுடியில் அணியும் ஆபரணத்தின் பெயர் 'திருவபிடேகம்' எனப்படும். க்ஷதிருப்பாதத்தில் அணியும் ஆபரணத்திற்கு, 'நூபுரம்' என்று பெயர்.பெருமாளை முதலில் திருவடியை தரிசித்தபின்பே, திருமுகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

    கோபியர் சேலைகளைக் கவர்தல்

    ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் வழக்கப்படி சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர். கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, அவ்வாடைகளைத் திருப்பித் தந்தான்.

    தசம ஸ்காந்தம் படித்தால் ஆண் குழந்தை பிறக்கும்

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.

    Next Story
    ×