என் மலர்
வழிபாடு

ராசிபுரத்தில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் தேர்

- கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
- ரூ.6 லட்சம் மதிப்பில் தேரை புனரமைத்தனர்.
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர் சிதிலமடைந்து காணப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
தற்போது கோவில் திருவிழா நடந்து வருவதை முன்னிட்டு நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர் குடும்பத்தினர் அவர்களது சொந்த செலவில் ரூ.6 லட்சம் மதிப்பில் தேரை புனரமைத்தனர். சாமி வைக்கும் பலகை, மர சிற்பங்கள், தேரில் சேதமடைந்த பகுதியை அகற்றிவிட்டு புதிய மரத்தில் சிற்பங்கள் செய்து பொருத்துதல், இரும்பு சக்கரங்களுக்கு பெயிண்டு அடித்து சீரமைத்தல் மற்றும் தேர் துணி ஆகிய பணிகள் நடந்தன.
இந்த நிலையில் நேற்று காலையில் புனரமைக்கப்பட்ட தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேர் நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. இதில் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், மாவட்ட பிரதிநிதி கல்யாண் ஜூவல்லரி ரங்கசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கவுன்சிலர் விநாயகமூர்த்தி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ் பாபு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரங்கசாமி, நகராட்சி உறுப்பினர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாக அதிகாரி நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ராஜேஷ் குமார் எம்.பி.க்கு பரிவட்டம் கட்டி பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புனரமைக்கப்பட்ட தேரை பக்தர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தேர் நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.