search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சகல செல்வங்களை வழங்கும் சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர்
    X

    சகல செல்வங்களை வழங்கும் சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர்

    • திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது.
    • திருவண்ணாமலையை பார்த்தபடி தெற்கு நோக்கி நரசிம்மர் காட்சி தருகிறார்.

    இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உலக உயிர்களுக்கு மெய்பித்துக் காட்டியது, திருமாலின் அவதாரமான நரசிம்ம அவதாரம். அவர் உடனடியாக பக்தர்களுக்கு பலன் அளிப்பவர்.

    அப்படிப்பட்ட நரசிம்மர் அருளும் ஆலயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அப்படி ஒரு உன்னதமான தலம்தான், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைந்துள்ள சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோவில்.

    தொண்டை மண்டலத்தின் பல்குன்ற கோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய போளூர், புலஸ்திய மகரிஷி தவம் இயற்றிய காரணத்தால் 'புலஸ்தியபுரம்' என்று புராணப் பெயர் பெற்றது. போளூர் நகரின் மேற்கே அமைந்துள்ளது, சம்பத்கிரி என்ற மலை.



    இங்கு குபேரனுக்கு அனைத்து சம்பத்களையும் (செல்வங்களையும், பொருளையும்) நரசிம்மர் வழங்கியதால், இது 'சம்பத்கிரி' என்று பெயர் பெற்றது.

    'பொருள்' நிறைந்த ஊர் என்பதாக, சம்பத்கிரி மலைக்கு கீழே அமைந்த ஊரை 'பொருளூர்' என்று அழைத்தனர். அதுவே மருவி 'போளூர்' என்றானதாக சொல்கிறார்கள். சம்பத்கிரி மலையில் சப்தரிஷிகளும் தவம் இயற்றியதாக கூறப்படுகிறது.

    சப்தகிரி மலையில் புலஸ்தியர் மற்றும் பவுலஸ்தியர் ஆகிய இரு மகரிஷிகள், திருமாலை நோக்கி தவம்புரிந்து வந்தனர். அந்த தவத்தின் பயனாக கோவிந்தனிடம் இருந்து ஒரு மாம்பழம் பிரசாதமாக கிடைத்தது. அதை பங்கிடும் போட்டியில் பவுலஸ்தியரின் இரண்டு கரங்களும் சிதைந்தன.

    இதையடுத்து பவுலஸ்தியர், இம்மலைக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சேயாற்றில் (செய்யாறு) தினமும் நீராடி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) நரசிம்மரை நினைத்து, இம்மலையை கிரிவலம் வந்தார்.

    48-ம் நாள் சேயாற்றில் மூழ்கி எழுந்தபோது, அவரது சிதைந்த கைகள் கூடி, அவர் கரங்களில் நரசிம்மர் விக்கிரகமும் கிடைத்தது. அந்த விக்கிரகத்தை ஊருக்குள் பிரதிஷ்டை செய்யும்படி அசரீரி கூறிட, அதன்படியே ஊருக்குள் பிரதிஷ்டை செய்தார்.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இம்மலையின் உச்சியில் கல் உடைக்கும்போது உளிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. அதை கண்டு அஞ்சிய மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    அன்றே ஊரில் இருந்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் இங்கு லட்சுமி நரசிம்மராக, சுயம்பு வடிவில் எழுந்தருளி உள்ளதாகக் கூறி மறைந்தார். இதையடுத்து அங்கே ஆலயம் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் இன்றுவரை சிறப்புடன் நடந்து வருகிறது.

    மலை மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ள நரசிம்மமூர்த்திக்கு ஹொய்சாளர்கள் ஊருக்குள் ஒரு ஆலயம் எழுப்பினர். இந்த ஆலயத்திற்கு விஜயநகர அரசர்களால் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

    பின்னாளில் விஜயநகர வம்சத்தில் வந்த ஓகூர் சீனிவாசராவ் என்பவர், உற்சவர் நரசிம்மரோடு ஸ்ரீதேவி - பூதேவி தாயார்களின் விக்கிரகத்தையும் இங்கே நிறுவியுள்ளார். மேலும் பாமா - ருக்மணி உடனான வேணுகோபால சுவாமியையும் கற்சிலையாக நிறுவினார்.

    இந்த சம்பத்கிரி மலை சுமார் 850 படிகளைக் கொண்டது. மலையடிவாரத்தில் சிறிய திருவடியான ஆஞ்சநேயருக்கும் சன்னிதி இருக்கிறது. அதோடு நான்கு ஓய்வு மண்டபங்களும் உள்ளன. இரண்டு குளிர்ந்த நீர் சுனைகள் காணப்படுகின்றன.

    மலை மீது ஏற, ஏற செங்குத்தான படிகள் அமைந்துள்ளன. மலை உச்சியில் அரண் போன்று மலையைச் சுற்றிலும் மதில்கள் அமைந்துள்ளன. நடுவே தென்முகம் பார்த்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆலயத்தின் முன்பு பலிபீடம், தீப ஸ்தம்பம், கருடாழ்வார் உள்ளனர். மின்னொளியில் மின்னும் வகையில், சங்கு, சக்கரத்துடன் திருநாமம் அமைக்கப்பட்டிருக்கிறது.


    கருவறைக்குள் சுயம்புவாக திருவண்ணாமலையை பார்த்தபடி தெற்கு நோக்கி நரசிம்மர் காட்சி தருகிறார். இவருக்கு முன்பாக லட்சுமி தேவியின் நரசிம்மமூர்த்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இவரது சன்னிதிக்கு வலது புறம் கனகவல்லி தாயாருக்கு தனி சன்னிதி உள்ளது. மலை மீது பிரம்ம தீர்த்தமும், மலையின் கீழ் புலஸ்திய தீர்த்தமும் இருக்கின்றன. பாஹுநதி என்னும் செய்யாறும் இத்தலத்தின் தீர்த்தமாக விளங்குகிறது.

    இவ்வாலயத்தில் உள்ள இறைவனுக்கு சுவாதி, மாத பிறப்பு, ஏகாதசி, திருவோணம், புனர்பூசம், ரோகிணி, பஞ்சமி திதி, சப்தமி திதி ஆகிய நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றன.

    சித்திரை வருடப்பிறப்பில் படிவிழா, வைகாசியில் 10 நாள் பிரமோற்சவம், ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், தனுர் (மார்கழி) மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி போன்றவை மலைக் கோவிலில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகளாகும்.

    திருமணவரம், புத்திரப்பேறு, அரசு வேலை, கடன் நிவர்த்தி, தொழில் முன்னேற்றம் மற்றும் அமானுஷ்ய - மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபட, பிரதோஷ நாட்களில் சம்பத்திரி லட்சுமி நரசிம்மருக்கும், ஊரில் உள்ள பாமா - ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி மற்றும் உற்சவர் நரசிம்மருக்கும் திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சாற்றி, பானகம் மற்றும் வெல்லத்தினால் ஆன நைவேத்தியங்களை படைத்து கிரிவலம் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது சம்பத்கிரி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்.

    சனிக்கிழமை மட்டும்...

    மலை மீது உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

    அதே நேரம் கீழே உள்ள வேணுகோபாலர் கோவில் தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    Next Story
    ×