என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
இன்று மாலை ஆடித்தபசு காட்சி: சங்கரன்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
- சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- இன்று இரவு சுவாமி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சியளிக்கிறார்.
தமிழகத்தில் உள்ள சிறப்பு பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவிலும் ஒன்று.
இங்கு நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆடித்தபசு திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி தினமும் கோமதி அம்பாள் காலை மற்றும் இரவில் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்தார். தொடர்ந்து பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் மண்டக படிதாரர்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.
9-ம் திருவிழாவான கடந்த 8-ந்தேதி தேரோட்டம் நடந்தது. 10-ம் திருவிழாவான நேற்று கோமதி அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று 11-ம் திருநாள் சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு சுவாமி காட்சியளிக்கும் தபசு காட்சி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தானம் சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள், சந்திர மவுலீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பரிவட்டம், திருக்கண் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பிற்பகல் 11.40 மணிக்கு கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
மாலை 5.30 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்க சுவாமி தனது உடலின் ஒரு பாதியை சிவனாகவும் மற்றொறு பகுதியை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயண சுவாமியாக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து கோமதி அம்பாள் தபசு மண்டபத்திற்கு மீண்டும் எழுந்தருளியதும் இரவு சுவாமி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சியளிக்கிறார்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கமான முறையில் தபசு காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இதையொட்டி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் 4 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜபாளையம் சாலை நீதிமன்றம் அருகிலும், நெல்லை சாலை அரசு மருத்துவமனை அருகிலும், திருவேங்கடம் சாலை நகராட்சி அலுவலகம் அருகிலும், தென்காசி சாலை சேர்ந்தமரம் விலக்கிலும் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் கூடுதல் எஸ்.பி. சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதிர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்