என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு அம்சங்கள்
- திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா
- முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் திருக்கார்த்திகை திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருகார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது குறித்து பார்ப்போம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகளை செய்தவர்களில் வல்லாள மகாராஜனும் ஒருவர். அவருடைய வேண்டுகோளின்படி அவருக்கு மகனாக இருந்து, தந்தைக்கு பிள்ளை செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அருணாசலேஸ்வரர் செய்ததாக தல வரலாறு சொல்கிறது.
வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, இறைவனே அவருக்கு இறுதிச்சடங்கை நடத்தியதாக தல புராணம் கூறுகிறது. இதனால் குழந்தை வரம் அருளும் இறைவனாகவும் அருணாசலேஸ்வரர் பார்க்கப்படுகிறார். அவரிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி, கோவிலை சுற்றி வலம் வந்து வழிபடுவார்கள்.
மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.
அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மலைப்பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலிதீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.
இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.
கிரிவலம் செல்வதற்கு சரியான பொழுது இரவு நேரம்தான். பவுர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும். இரவு நெருங்கியதும் நிலவொளி பிரகாசிக்க தொடங்கும் வேளையில் கிரிவலத்தை தொடங்கலாம். அந்த நிலவொளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கிறார்.
அந்த நிலவு ஒளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். நிலவு ஒளியால் மனத்தெளிவு உண்டாகும். கிரிவலம் வருபவர்கள் இறை நாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வலம் வந்தால் பலன் இரட்டிப்பாகும்.
`அருணன்' என்றால் `சூரியன்' என்று பொருள். `அசலம்' என்றால் `கிரி' அல்லது `மலை' என்று பொருள். சூரியனை போன்ற ஒளி வடிவாக இறைவன் மலை உருவில் காட்சி அளிப்பதால் இந்த மலை `அருணா சலம்' என்று அழைக்கப்படுகிறது.
கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த மலை, கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் திருவண்ணா மலையை சுற்றி எட்டு திசைகளிலும் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களின் சன்னிதியில் வழிபாடு செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2688 அடி மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் இந்த மகாதீபம் ஏற்றப்படும். அதற்கு ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் போன்றவை பயன்படுத்தப்படும்.
முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும். அதில் இருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கை கொண்டு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். இவை பஞ்ச மூர்த்திகள் என்றும் கூறப்படும். மாலையில் எல்லா தீபங்களும் கொடிமரம் அருகில் ஒன்று சேர்க்கப்படும். அதன் பிறகு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் வரை எரிந்து கொண்டே இருக்கும்.
ஆலய அம்சங்கள்
இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. 25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 தனி சன்னிதி கள், 22 விநாயகர் சிலைகள், 42 செப்பு சிலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலைக்கு நவ துவார பதி என்ற பெயரும் உண்டு. அதற்கு 9 நுழைவுவாசல்களை கொண்ட நகரம்' என்று பொருள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்