search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம்
    X

    ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம்

    • திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தனர்.
    • பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பல்வேறு பாசுரங்களை பாடினர்.

    திருப்பதி:

    பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மதியம் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமிக்கு விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவாசனம், தூப தீப நெய்வேத்தியம், ராஜோபசாரம் நடந்தது.

    முதலில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தேன், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    திருமஞ்சனத்தின் போது வேத பண்டிதர்கள் வேதபாராயணங்கள், உபநிடதங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் எனப் பஞ்சசூக்த மந்திரங்களை ஓதினர். மேலும் திவ்யப் பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பல்வேறு பாசுரங்களை பாடினர்.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பல வண்ணக் கற்களால் தயார் செய்யப்பட்ட கண்ணாடி மாலைகள், ஆப்பிரிக்கட்டு மாலைகள், வெட்டி வேர் மாலைகள், குருவெறு மாலைகள், வண்ணமயமான ரோஜா மாலைகள், மஞ்சள் ரோஜா மாலைகள், பலவகையான உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள், வெண்முத்து மாலைகள், கிரீடங்கள், துளசி மாலைகள் ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் அனைத்து அலங்காரமும் செய்யப்பட்டது. அலங்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார். மேலும் திருமஞ்சனம் நடத்தப்பட்ட ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பிரத்தியேக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த மண்டபல அலங்காரத்துக்காக சம்பிரதாய பாரம்பரிய மலர்கள், அலங்கார கொய் மலர்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அலங்கார கணிக்கையை ஐதராபாத்தை சேர்ந்த பக்தர்களான ஸ்ரீஹரி, ஸ்ரீதர், சீனிவாஸ் ஆகியோர் ஏற்றனர்.

    Next Story
    ×