search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுமக்கும் பாரத்தை சுகமாக்குங்கள்- ஆன்மிக கதை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சுமக்கும் பாரத்தை சுகமாக்குங்கள்- ஆன்மிக கதை

    • சுமை என்று நினைத்தால் சுமை.
    • பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம்.
    • இறைவனை முழுமையாக நம்புங்கள்.

    துவாரகையை ஆட்சி செய்து கொண்டிருந்த கிருஷ்ணரைப் பார்க்க ஒரு பெண் வந்திருந்தாள். அவள் கிருஷ்ணரின் மீது அளவற்ற பக்தி கொண்டவள். சொந்தம் என்று ஒருவரும் இல்லாத நிலையில், இறைவனே கதி என்று கிருஷ்ணரை நம்பிக் கொண்டிருப்பவள். அவள் கிருஷ்ணரைப் பார்த்து, "பகவானே.. உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர, எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?" என்றாள்.

    கிருஷ்ணர் தன்னிடம் பக்திப் பூர்வமாக ஏதாவது கேட்பார். அவருக்கு அதை சேவையாகச் செய்யலாம் என்று நினைத்துதான், அந்தப் பெண் அப்படிக் கேட்டாள். ஆனால் இறைவனின் திருவிளையாடலை யார்தான் அறிய முடியும்.

    கிருஷ்ணர் அந்தப் பெண்ணிடம் ஒரு கோணிப்பையைக் கொடுத்து, "நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் இதைத் தூக்கிக்கொண்டு வா. அது போதும். நம் இருவர் கண்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த கோணிப்பை தெரியாது" என்றார்.

    கிருஷ்ணர், இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டையை தருவார் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தாலும், இறைவன் சொன்னதை சேவையாக செய்ய வேண்டும் என்ற நோக்கம் அவளிடம் இருந்ததால், கிருஷ்ணர் சொன்னபடியே அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அந்தக் கோணிப்பையை தூக்கிக்கொண்டு சென்றாள்.

    பாரம் மிகுந்த அந்த கோணிப்பைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய அந்தப் பெண்ணிற்கு ஆசை இருந்தது. ஆனால் அவள் அதை அறிவதை கிருஷ்ணர் விரும்பவில்லை. எனவே அவள் அந்த ஆசையை கைவிட்டாள். சில காலம் இப்படியே கடந்தது. அவள் தூக்கித் திரிந்த கோணிப் பையின் பாரம் கூடிக்கொண்டே போனது. அவளால் ஒரு கட்டத்தில் அந்தப் பையை தூக்க முடியவில்லை.

    அவள் கிருஷ்ணரைப் பார்த்து, "இறைவா.. உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீயோ சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாய். கருணையே வடிவான உனக்கு இது அழகா?" என்று கேட்டாள்.

    "பெண்ணே.. உன் பலவீனத்தில்தான் என் பலம் இருக்கிறது. கவலைப்படாதே நான் உன் பக்கம்தான் இருக்கிறேன். தைரியமாக நான் சொல்லும் வரை என்னுடன் இந்தப் பையை சுமந்துவா. உனக்கு நான் உதவுகிறேன்" என்று சொன்ன கிருஷ்ணர், அந்தப் பெண் தடுமாறிய பல இடங்களில் அவளுக்கு கை கொடுத்து, சில நேரங்களில் அந்த கோணிப்பையை தானும் தூக்கி அருள்புரிந்தார்.

    ஒரு நாள் அவர்கள் சேரவேண்டிய இடம் வந்தது. அப்போது கிருஷ்ணர், "இந்த மூட்டையை நீ சுமந்தது போதும்.. கீழே இறக்கி வை" என்றவர், "இந்த மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய உனக்கு ஆசை இருந்தது அல்லவா? இப்போது அறிந்து கொள்ளலாமா?" என்று கூறியபடி அந்த மூட்டையை அவிழ்த்தார்.

    அந்த மூட்டையில் வைக்கோல் தென்பட்டது. அதை அகற்றியபோது, அதற்குள் அரிய வகை மாணிக்கங்களும், வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அவை.

    இப்போது கிருஷ்ணர், "இத்தனை காலமும் பொறுமையுடன், நான் அளித்த சுமையை சுமந்தபடி காத்திருந்ததற்காக என்னுடைய பரிசு இது, எடுத்துக்கொள்" என்றாா்.

    ஆனந்தத்திலும் வியப்பிலும் மூழ்கிப்போனால் அந்தப் பெண்.

    நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு சுமையும், அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும், அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் நம் கைகளில் தான் அது உள்ளது. நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். அந்தஅளவு சுமை மட்டுமே கடவுள் தருவார். நாம் தடுமாறும் நேரங்களில், கைகொடுக்கவும் செய்வார். எனவே இறைவனை முழுமையாக நம்புங்கள்.

    Next Story
    ×