என் மலர்
வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா நாளை நடக்கிறது
- இன்று ஸ்ரீகாளஹஸ்தி கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
- ஏழு விதமாக அம்மன்களுக்கு அலங்காரம் செய்யப்படும்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில், சிவன் கோவிலின் துணைக் கோவிலான ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் ஏழு கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு ஏழு கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
நாளை அதிகாலை ஏழு கங்கையம்மன் கோவிலில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு ஏழு பகுதிகளில் எழுந்தருள்கிறார்கள். நாளை இரவு 8 மணியளவில் ஏழு கங்கையம்மன்கள் ஊர்வலம் தொடங்கி நள்ளிரவு 12 மணியளவில் சொர்ணமுகி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு கூறியதாவது:-
ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி விழா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோவிலில் மின்விளக்கு அலங்காரம், தோரணம் அமைத்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்துள்ளனர். ஏழு இடங்களில் உற்சவர்களை நிலை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஏழு விதமாக அம்மன்களுக்கு அலங்காரம் செய்யப்படும். அம்மன்களுக்கு அலங்காரம்செய்வதற்காக சென்னை, புதுச்சேரியில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதில் சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் அருகில் பக்தர்களை கவரும் வகையில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட உள்ளது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.