என் மலர்
வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா: பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன்
- ஏழு கங்கையம்மன் ஏழு வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- ஆற்று நீரில் ஏழு அம்மன் உருவங்களும் கரைக்கப்பட்டன.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. ஏழு கங்கையம்மன்களான பொன்னாலம்மன், முத்தியாலம்மன், காவம்மன், அங்கம்மன், கருப்பு கங்கையம்மன், அங்காளம்மன், புவனேஸ்வரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரில் ஏழு வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
எழுந்தருளிய இடங்களில் அம்மன்களுக்கு பக்தர்கள் சிறப்புப்பூஜைகள் செய்தும், ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். பூஜைகள் முடிந்ததும் ஏழு அம்மன்களும் மீண்டும் ஒரே இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, அந்த இடத்தில் இருந்து ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு புறப்பட்டனர். ஆற்று நீரில் ஏழு அம்மன் உருவங்களும் கரைக்கப்பட்டன.
திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆங்காங்கே தோரணங்கள் கட்டுப்பட்டு இருந்தது. அம்மன்கள் ஊர்வலத்தின்போது பக்தர்களுக்கு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகருக்குள் கனரக வாகனங்கள் வராமல் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.