search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    X

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    • இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறுகிறது.
    • தெப்பத்திரு விழா நாளை நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வாகன வீதி உலா நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையடுத்து சாமியும், அம்பாளும் அம்மன் தேருக்கு எழுந்தருளினார்கள். அறம் வளர்த்த நாயகி அம்மன் இந்திரன் தேரிலும், விநாயகர் விநாயகர் தேரிலும் எழுந்தருளினார்கள். இதைத் தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். இதை தொடர்ந்து அம்மன் தேரும் பின்னர் இந்திரன் தேரும் இழுத்துச் செல்லப்பட்டது.

    தேரோட்டத்தை மேயர் மகேஷ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    தேரோட்டத்தில் பெண்கள், ஆண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 4 ரத வீதிகளிலும் இழுத்து வரப்பட்டு தேர் மதியம் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி இன்று காலை முதலே சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திரு விழா நாளை (30-ந்தேதி) நடக்கிறது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருள செய்து 3 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு திருஆராட்டு நடைபெற உள்ளது. தெப்ப திருவிழாவையொட்டி தெப்பகுளத்தின் நடுவில் உள்ள மண்டபம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    Next Story
    ×