search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உயர்ந்த பண்புகள்...
    X

    உயர்ந்த பண்புகள்...

    • அதிகம் சிரித்தால் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதை விட்டும் உள்ளம் மரணித்துவிடும்.
    • ஐந்து விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் பேணி நடந்தால் அவர்தான் உண்மையிலே உயர்ந்த பண்புள்ளவராவார்.

    இஸ்லாம் மனித வாழ்க்கையை இரண்டாக குறிப்பிடுகிறது. ஒன்று இம்மை எனப்படும் இந்த உலக வாழ்க்கை. அடுத்தது

    இறைவனின் நெருக்கத்தில் வாழும் மறுமை வாழ்க்கை. இந்த இரண்டில் மறுமை வாழ்க்கையே சிறந்தது என்று ஏக இறைவன் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகின்றான்.

    இறையச்சத்துடன், நற்பண்புகளுடன், உயர்ந்த சிந்தனைகளுடன், பிறருக்கு உதவும் உள்ளத்துடன் ஒருவன் இம்மையில் வாழ்ந்தால் மறுமையில் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும். ஒரு மனிதன் உயர்ந்த பண்புள்ளவராக வாழ 5 முக்கிய அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். இது குறித்த நபி மொழியை காண்போம்.

    ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் இவ்வாறு கூறினார்கள்:

    'நான் சில செய்திகளை கூறுகிறேன், அதை செயலாற்றுபவர் யார்?, அல்லது செயலாற்றும் நபருக்கு கற்றுக் கொடுப்பவர் எவரும் உண்டா?'.

    நபிகளார் இவ்வாறு கூறிய தும் நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள், 'நானிருக்கிறேன் நாயகமே' என்றார். உடனே நபிகள் நாயகம் அவ ரது கையை பிடித்து 5 விஷயங்களை கூறினார்கள். அவை வருமாறு:-

    1) இறைவன் எவற்றை தடை செய்துள்ளானோ அவற்றை விட்டு விலகி, பயந்து நடந்து கொண்டால் மிகப்பெரிய வணக்கம் புரிந்தவராகலாம்.

    இறைவனுக்கு இணை வைத்தல், மது அருந்துவது. வட்டி வாங்கி சாப்பிடுவது. கொள்ளை அடிப்பது, விபச் சாரம் புரிவது, சூனியம் செய்வது, கொலை செய்வது போன்றவை பெரும்பாவங்கள் ஆகும். இவை அனைத் தும் இறைவனால் தடுக்கப்பட்டவை. இது போன்ற எந்தப் பெரும் பாவமும் செய்யாத போதிலும் தொழுகை, நோன்பு நோற்பது, ஜகாத், ஹஜ் போன்ற நல்ல காரியங்களை ஒருவர் செய்வதில்லை என்றால் அவர் குற்றவாளி தான்.

    அதே போன்று இதற்கு மாற்றமாக எல்லா நல்ல காரியங்களையும் செய்கிறார், அதேபோல பாவங்களையும் செய்கிறார் என்றால் இவரும் குற்றவாளி தான். மனிதன் தான் செய்யும் நல்ல காரியங்கள் யாவும், பாவ மான காரியங்களை விட்டும் தடுப்பவையாக அமைய வேண்டும். இவ்விரண்டையும் ஒரு மனிதன் பேணி செயல்படும் போது அவர்தான் அதிக வணக்கமுடையவராக கருதப்படுகிறார்.

    2) இறைவன் எதை பங்கிட்டு வழங்கியுள்ளானோ அதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் பண்பு இருக்குமேயானால் அவர் தான் அதிகம் வசதி படைத்தவராவார்". இறைவன் ஒரு மனிதனுக்கு என்ன தேவை ஏற்படுமோ அதை அந்தந்த காலகட்டங்களில் வழங்கிக்

    வழங்கிக் கொண்டுதான் இருக்கிறான். அதில் எவ்வித குறையும் செய்யமாட்டான்.

    உயர்ந்த பண்புகள் முழுமையாக ஒரே நேரத்தில் வழங்குவதில்லை. உதாரணமாக, ஒரு மனிதன் 90 ஆண்டு வாழ்கிறான் என்றால், அவனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள உணவு, குடிநீர் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டால் சேமித்து வைத்து உண்ணாமல் குடிக்காமல் திகைத்து விடுவான். அதுமட்டுமல்லாமல் சோம்பேறியாகி உடல் நலமே கெட்டுவிடும். கல்லுக்குள் இருக்கும் ஜீவராசிக்கு உணவு வழங்கும் வன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டான் என்ற நம் பிக்கை வரவேண்டும். அதே சமயம் வீட்டில் முடங்கிக் கிடப்பதும் கூடாது. கொடுப்பவன் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பான் என்று எண்ணக் கூடாது. நம்மிடமிருந்தும் உழைப்பு வேண்டும், அதன் மூலம் கிடைப்பதை ஏற்றுக் கொண்டு, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற சொல்லுக்கேற்ப நடப் பது தான் பெரும் வசதி படைத்தவர் என்று எண்ணப்படும்.

    3) 'பக்கத்து வீட்டினரிடம் உபகாரமுடன் நடந்து கொள்ள வேண்டும்'. அப்படி நடந்தால் தான் உண்மையான முறையில் விசுவாசங்கொண்டவராக முடியும். அண்டை வீட்டாரிடம் எந்த அளவுக்கு உபகாரமுடன் நடக்க வேண்டும் என்றால், சொந்தங்களிடம் நடப்பதைப் போல் நடக்க வேண்டும் என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

    4) தனக்கு எதை விரும்புவாரோ அதையே பிறருக்கும் விரும்பவேண்டும். அப்பொழு துதான் முழுமையாக வழிபட்டவராக முடியும். மனிதனின் இயல்பு தனக்கு பிடிக்காத பொருளை அடுத்தவருக்கு பிடிக்கும் என்று வழங்குவதுதான். ஆனால், நபிகள் (ஸல்) அப்படிக் கூறவில்லை. மாறாக தனக்கு விருப்பமான பொருளைத்தான் அடுத்தவருக்கும் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் நன்மை உண்டு. கெட்டுப்போன உணவுகளைக் கூட மற்ற உயிரினங்களுக்கு போடக்கூடாது என்பது ஷரீஅத் சட்டமாகும்.

    5) அதிகமாக சிரிப்பது கூடாது'. அப்படி சிரித்தால் உள்ளம் மரணித்துவிடும். அதாவது சந்தோஷமான நேரத்திலும் கூட நடுநிலையை கடைப்பிடிக்க வேண்டும். அதிகம் சிரித்தால் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதை விட்டும் உள்ளம் மரணித்துவிடும். அதிகமாக சிரிப்பதால் ஆபத்துக்கள் கூட ஏற்படலாம்.

    இந்த ஐந்து விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் பேணி நடந்தால் அவர்தான் உண்மையிலே உயர்ந்த பண்புள்ளவராவார். நாமும் முயற்சி செய்வோம், முன்னேற்றப் பாதையில் வெற்றி காண்போம்.

    Next Story
    ×