search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உயர்வானது, கிருஷ்ணர் நாமமே!
    X

    உயர்வானது, கிருஷ்ணர் நாமமே!

    • ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார்.
    • நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்தியபாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினர். தங்களுடைய கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.

    கிருஷ்ணரும் அதற்கு சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணர் அதில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் மறுவார்த்தை பேசாமல் துலாபாரத்தில் அமர்ந்து, ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை. தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.

    இந்த நிகழ்ச்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது. இறைவனுக்கும், அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார். கலியுகத்தில், அதனால்தான் நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    Next Story
    ×